Published : 03 Nov 2021 12:39 PM
Last Updated : 03 Nov 2021 12:39 PM

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை இருவகையான குடிமக்களை உருவாக்கியிருக்கிறது: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

கோப்புப்படம்

திருவனந்தபுரம்

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை இருவகையான குடிமக்களை உருவாக்கி இருக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள இரு தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்குப் பல்வேறு நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. சில நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதில் அஸ்ட்ராஜென்கா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்துவிட்டன.

இந்தத் தடுப்பூசியைச் செலுத்தியோர் எந்த நாட்டுக்கும் தடையின்றிச் செல்ல முடிகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியோருக்குப் பல நாடுகள் அனுமதி மறுத்து வருவதால், வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த கிரிகுமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். கிரிகுமார் முதலில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய நிலையில் அவருக்கு சவுதி அரேபியா சென்று மீண்டும் பணியில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆதலால், தனக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் கிரிகுமார் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.குன்னிகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குன்னிகிருஷ்ணன் கூறுகையில், “மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை இருவிதமான குடிமக்களை நாட்டில் உருவாக்கியுள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் வெளிநாட்டுக்கு சுதந்திரமாக எங்கும் செல்ல முடிகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியோர் வெளிநாடு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இது குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவது போல் இருக்கிறது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு அடுத்த ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரருக்கு அவரின் ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்க உத்தரவிட வேண்டியதிருக்கும்.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் வெளிநாட்டில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்துக்குச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அந்த நிறுவனங்கள் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் அளிக்கையில், “தடுப்பூசிக் கொள்கை, திட்டம் அனைத்தும் முறையாகக் கண்காணிக்கப்படுகின்றன. மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு சான்றளித்த பின்புதான் தடுப்பூசி மக்களுக்குச் செலுத்தப்படுகின்றன. ஆதலால், தடுப்பூசியின் செயல்பாட்டில் எந்தவிதமான தரக்குறைவும் இல்லை, பக்கவிளைவும் இல்லை. இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x