Published : 03 Nov 2021 12:00 PM
Last Updated : 03 Nov 2021 12:00 PM
இடைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள், பிரதமர் மோடி ஆணவத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் 14 மாநிலங்களில் காலியாக இருந்த மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், அந்தந்த மாநிலத்தில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றியைப்பெற்றுள்ளன.
காந்தாவா மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் காங்., வென்றது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மக்களவை தொகுதியை சிவசேனா கைபற்றியுள்ளது.
பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில் சிங்க்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வென்றார். அதே நேரத்தில் ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வென்றார்.
இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பதேபுர், அர்க்கி, ஜூப்பாய் கோத்காய் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும் வென்றது. இந்த நான்கில் மூன்றில் பாஜக டெபாசிட் இழந்தது.
அசாமில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் மூன்றில் பாஜக, இரண்டில் அதன் கூட்டணி கட்சியான யுபிபிஎல் கட்சி வென்றன. தெலுங்கானாவின் ஹசுராபாத் தொகுதியை பாஜக கைபற்றியது.
இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
‘‘3 லோக்சபா தொகுதிகளில் 2ல் பாஜக தோல்வியடைந்துள்ளது. சட்டப்பேரவைகளில் காங்கிரஸுடான நேரடிப் போட்டியில் பாஜக பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்துள்ளது. இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இதற்கு சாட்சி. மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள். மோடி அவர்களே ஆணடத்தை கைவிடுங்கள். 3 கறுப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கைவிடுங்கள். மக்களின் வேதனையை அலட்சியம் செய்வது தீங்கு விளைவிக்கும்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT