Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM
மிகவும் நல்ல செய்திகள் அபூர்வமாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இதுபோன்ற செய்திதான் ஏர் இந்தியா தொடர்பானது. அது மோடி அரசிடமிருந்து டாடா குழுமத்துக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்திதான் அது. சோஷலிஸம் என்ற பெயரில் 1953-ம் ஆண்டு மிகவும் கொடூரமாக, நிறுவனர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் நிறுவனர்களிடமே விற்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் ராஜ்யத்தின் மிகப் பெரிய அடையாளம்தான் ஏர் இந்தியா. இன்று தினசரி அந்நிறுவனம் எதிர்கொள்ளும் நஷ்டம் ரூ.20 கோடி. இது இன்று ரூ.1 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மக்கள் நினைக்கும் அளவுக்கு மிகவும் மோசமான நிறுவனம் அல்ல. அதேசமயம் டாடா நிறுவனத்தைப் பொருத்தமட்டில் அது உற்சாகம் அளிக்கும் நடவடிக்கையா அல்லது மிகப் பெரும் பேரழிவா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாஜ்பாய் அரசாங்கத்தைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகுமுதலில் தனியார் வசம் செல்லும் முதலாவது நிறுவனம் ஏர் இந்தியா. தனியார் மயமாவது என்பது மிகவும் ஊக்கமளிக்கும் நடவடிக்கை. அத்தகைய உற்சாகமான நடவடிக்கையைமோடி அரசு துணிந்து மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தொழில்களை அதற்குரிய தன்மையோடு புத்தி சார்ந்து நடத்துவதில் தெளிவாக உள்ளது என்பதை மோடி அரசு உணர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நடைமுறை சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. ஆனால் ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்த முன்வரும் தனியாரிடம் எந்த அளவுக்கு நெகிழ்வு தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், தனியார்மயமாக்கலில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பதையும் ஏர் இந்தியா நிறுவன தனியார்மயமாக்கல் நடவடிக்கை உணர்த்தியுள்ளது.
இந்த விற்பனை நடவடிக்கையானது அரசுக்கு மிகப் பெரும் வெற்றியாக அதன் மணிமகுடத்தில் ஒரு வெற்றி அடையாளமாக விளங்கும். இதன் மூலம் மிகப் பெரும் அளவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எளிய வழி பிறந்துள்ளது என்றே கருதலாம்.
1932-ம் ஆண்டு தனது முன்னோர் ஜேஆர்டி டாடாவால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் மீண்டும் அந்தக் குழுமத்திடமே திரும்பியதை வரவேற்பதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரத்தன் டாடா. மிகவும் ஆரோக்கியமாக, சிறப்பாக செயல்பட்டு வந்த நிறுவனத்தை தேசியமயமாக்கல் என்ற கொள்கையின்படி அதை அரசு நிறுவமான மாற்றி பெரும் தவறை புரிந்ததை உணர்ந்து அந்நிறுவனத்தின் தலைவராக ஜேஆர்டி டாடாவைஅரசு நியமித்தது.
இதனாலேயே பல ஆண்டுகாலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது இந்நிறுவனம். 1960-க்குமுந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு உயர்படிப்புக்காக சென்றபோது டாடாவின் தலைமை குறித்து மிகவும் பெருமிதம் அடைந்துள்ளேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே மிகச் சிறப்பாகவே அது செயல்பட்டு வந்துள்ளதோடு உலகின் மிகச் சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக அது திகழ்ந்தது. ஆனால் அத்தகைய பெருமைகள் அனைத்தையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தட்டிப் பறித்துகொண்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் அந்நிறுவன பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தது ஏர் இந்தியா நிறுவனம் என்பதுதான்.
ஏர் இந்தியா நிறுவனம் பல சொத்துகளை டாடா நிறுவனத்துக்கு கொண்டு வந்துசேர்த்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் குறிப்பாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலும் விமானத்தை நிறுத்துவதற்கான இட வசதி ஏர் இந்தியாவுக்கு உள்ளது. 130-க்கும் அதிகமான விமானங்கள், பயிற்சிபெற்ற விமானிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். விமான போக்குவரத்தில் வளர்ச்சி வாய்ப்புள்ள தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் போக்குவரத்தில் இந்நிறுவனம் மிகச் சிறப்பான பங்களிப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் வரும் காலங்களில் பிரகாசமாக உள்ளன. ஆனால் போட்டிகளே இல்லாத மிகவும் நலிவடைந்த இந்திய ரயில்வே துறையில் தனியார் நிறுவனம் எதுவுமே ரயில் சேவையைத் தொடங்கவில்லை என்ற சூழலில் அவர்கள் விமானப் பயணிகளாக மாறுவதற்கான வாய்ப்பு கள் ஏராளமாக உள்ளன.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சாதகஅம்சங்கள் பல இருந்தாலும், பாதகஅம்சங்கள் இல்லாமல் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்துள்ள நிறுவனம் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடுவதால் மிக மோசமான சேவையை அளித்துவந்துள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து துறை மிகவும் கடுமையான போட்டிகளை உள்ளடக்கியதாகும். குறிப்பாக குறைந்த கட்டண விமான சேவை என்பது இந்நிறுவனத்துக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்.
உள்நாட்டு போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் 57 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளதே இதற்கு முக்கிய சான்றாகும். இதைஎதிர்கொள்ளும் அளவுக்கு சந்தையைவளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை எதிர்கொண்டு சமாளிப்பதோடு விரைவிலேயே நஷ்டத்திலிருந்து மீள வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதேநேரம் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பகுதி கடனை அரசே ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்நிறுவனத்தை மீண்டும் லாபப் பாதைக்குத் திருப்புவது பெரும் சிரமமாக இருக்காது.
இந்த விஷயத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அரசு தொழில் நடவடிக்கைககளில் ஈடுபடக் கூடாது என்பதாகும். அரசு அதிகார வர்க்கத்தில் ஒரு நிறுவனம் எப்படி நலிவடையும் என்பது கண்கூடாக தெரிந்துள்ளது. ஜேஆர்டி டாடா இந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தது.
இப்போது நிறுவன செயல்பாடு மூலம் இதை லாபப் பாதைக்கு திருப்ப வேண்டும். இத்தகைய ரிஸ்க்கை எவரும் எடுக்க முன்வர மாட்டார்கள். ஏர் இந்தியாநிறுவனத்தில் இயக்குநராக நான் இருந்தபோது, மூன்று விமானங்கள் அவசியமற்றவை என்று உணர்ந்தேன். இவற்றை குத்தகைக்கு விட வேண்டும் என்று இயக்குநர் குழுவும் நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் அது செயல்படுத் தப்படவேயில்லை. காரணம் ஒரு நிறுவனம் கூட அதை ஏற்கவில்லை. சிஏஜி, சிவிசி மற்றும் சிபிஐ ஆகியன இதை குத்தகைக்கு விடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தன. ரூ.400 கோடி வருமானம் தரும் ஒரு நிகழ்வு ஏன் நடைபெறவில்லை என்பது புரியாத புதிராகும்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்திடம் வந்தது புதிய அத்தியாயமாகும். உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இதை உருவாக்க வேண்டும். திறமை மிக்கவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.குறிப்பாக ஜெட் மற்றும் கிங் பிஷர் நிறுவனங்கள் மூடப்பட்ட சூழலில் அதில் பணியாற்றிய திறமை மிக்கவர்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
கட்டுரையாளர் ஏர் இந்தியா இயக்குநர் குழுவில் இயக்குநராக இருந்தவர். ரயில்வே அமைச்சகம் ஏற்படுத்திய தேப்ராய் குழுவின் உறுப்பினர். பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT