Published : 02 Nov 2021 03:08 AM
Last Updated : 02 Nov 2021 03:08 AM

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக்குக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு: ஆதாரங்களை வெளியிடுவதாக பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக்குக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துவேன் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி பொறுப்பில் உள்ளது. முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி வகிக்கிறார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் கேபினட் அமைச்சருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான், போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே விசாரித்து வருகிறார். இந்நிலையில், அதிகாரி சமீர் வான்கடே, எஸ்.சி. ஒதுக்கீட்டில் பணியில் சேர்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று அமைச்சர் நவாப் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். அத்துடன், பாஜக மீது சரமாரியாக புகார்கள் தெரிவித்தார்.

குறிப்பாக, ‘‘போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தேவேந்திர பட்னாவிஸுக்கு தொடர்புள்ளது. அந்த கும்பலில் ஒருவர் கைது செ்ய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்’’ என்று நவாப் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:

போதை விற்பனையாளர் நிதியுதவியில் உருவாக்கப்பட்ட இசை ஆல்பத்தில் நான் பங்கேற்றதாக நவாப் மாலிக் கூறுவதை கேட்டு சிரிப்புதான் வருகிறது. அவருக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துவேன். தீபாவளிக்கு முன்னதாக அவர் ‘சிறிய வெடி’யை கொளுத்திப் போட்டிருக்கிறார். நான் தீபாவளி முடியட்டும் என்று காத்திருக்கிறேன். அப்போது, ‘பெரிய வெடி’யாக போடுகிறேன்.

இசை ஆல்பத்தில் என் மனைவி அம்ருதா பாடினார். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். ஆனால், என் மனைவியின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு நவாப் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் இருந்தே அவரது மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றம் சுமத்தி, அவரது மருமகன் சமீர் கான் மீதான குற்றப் பத்திரிகையை நீர்த்துப் போக செய்ய நவாப் மாலிக் முயற்சிக்கிறார். மும்பையில் நதிகளை மீட்டெடுக்கும் அமைப்பான, ‘ரிவர் மார்ச்’ என்ற அமைப்பு, நான் முதல்வராக இருந்த போது 4 ஆண்டுக்கு முன் தற்போது போதைப் பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் ஜேதீப் ரானா என்ற நபரை வீடியோ ஆல்பம் தயாரிக்க நியமித்தது. அந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் நிறைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. நதிகளை மீட்டெடுக்கும் பணியில் நானும் எனது மனைவியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

அந்த ஜேதீப் ரானாவுடன் எனக்கோ எனது மனைவிக்கோ எந்த தொடர்பும் இல்லை. நவாப் மாலிக்கின் மருமகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி என்றால் தேசியவாத காங்கிரஸ் கட்சி போதைப் பொருள் விற்பனை செய்கிறதா?

இவ்வாறு தேவேந்திர பட்னா விஸ் கூறினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x