Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM
புதுடெல்லி; நாட்டில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோல் அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஐஎன்எல்டி (இந்திய தேசிய லோக் தளம்) தலைவர் அபே சவுதாலா, முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் இருவர் ஆவார். ஹரியாணாவின் எல்லனாபாத் தொகுதியில் மாலை 5 மணி வரை 73 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின. ஐஎன்எல்டி எம்எல்ஏ அபே சவுதாலா கடந்த ஜனவரியில் பதவி விலகியதால் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அசாமின் 5 தொகுதிகளிலும் 73.38 சதவீத வாக்குகளும் மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் சுமார் 71 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. அடுத்த ஓரிரு மணி நேரத்திலிருந்து முன்னணி நிலவரம் தெரியவரும். இன்று இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT