Published : 01 Nov 2021 07:06 PM
Last Updated : 01 Nov 2021 07:06 PM
தேசப் பிரிவினைக்குக் காரணமான முகமது அலி ஜின்னாவை, சர்தார் வல்லபாய் படேலுடன் ஒப்பிட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலிபான் மனநிலை படைத்தவர் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாகச் சாடியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நேற்று தேச ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று பேசுகையில், “சர்தார் வல்லபாய் டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனையுடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே மூவரும் பாடுபட்டனர்” எனத் தெரிவித்தார்.
ஆனால், சர்தார் வல்லபாய் படேலையும், முகமது அலி ஜின்னாவையும் ஒரே மாதிரி சமமாக வைத்துப் பேசிய அகிலேஷ் யாதவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் மொராதாபாத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அகிலேஷ் யாதவைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
''அகிலேஷ் யாதவின் பேச்சை நான் நேற்று கவனித்தேன். நாட்டைப் பிளவுபடுத்திய ஜின்னாவையும், தேசத்தை ஒருங்கிணைத்த சர்தார் வல்லவாய் படேலையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது வெட்கக்கேடான கருத்து.
தலிபான் மனநிலைதான் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும். சில நேரங்களில் சாதியின் பெயராலும், அதில் வெற்றி பெறாவிட்டால், பெரிய தலைவர்களை நோக்கியும் பேசி ஒட்டுமொத்தமாக வேதனைப்படுத்துவார்கள்.
அகிலேஷ் யாதவின் கருத்தை ஏற்க முடியாது. ஒவ்வொருவரும் அவரைக் கண்டிக்க வேண்டும். தனது பேச்சுக்கு அகிலேஷ் யாதவ் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் குறித்த அவரின் ஒப்பீட்டை ஏற்க முடியாது.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவர் படேல். தேசத்தைக் கட்டமைத்தவர். தேசத்தை ஒருங்கிணைத்து, கட்டுக்கோப்பாக இருப்பதற்குக் காரணமாக இருந்தவர் படேல்.
ஆனால், பிரிவினைவாத மனதுடன் ஜின்னாவைப் புகழ்ந்து சர்தார் வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு அவரைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இந்த தேசத்தின் மக்கள் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஒருபோதும் பிரிவினையை ஏற்கமாட்டார்கள்''.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஜின்னா-படேல் குறித்து அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டுப் பேசியதும், அவருக்கு பதிலடி கொடுத்து பாஜக பேசியதும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்து-முஸ்லிம் பிரிவினைச் சூழலை உருவாக்குவதற்காகத்தான்” எனச் சாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT