Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட சேவை புத்தகத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் வெளியிட்டார். உடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ராஜா, முதன்மை மாவட்ட நீதிபதி அருள்முருகன், ஆட்சியர் மா.அரவிந்த், மாநில சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் ராஜசேகர், எஸ்.பி. பத்ரிநாராயணன் உள்ளனர்.

நாகர்கோவில்

“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் உதித் உமேஷ் லலித் புதிய மெகா சட்ட சேவை முகாமை தொடங்கி வைத்து, சட்டசேவை புத்தகத்தை வெளியிட்டார். ‘வீடு தேடிவரும் நீதி’ சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையையும் லோக் அதாலத் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரபுரத்தில் குறிப்பிட்ட இன மக்களுக்கு தகன மேடை இல்லை என, கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், சட்டப்பணிகள் ஆணையம் இணைந்து அந்த கோரிக்கையை நிறைவேற்றியது. இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தகன மேடைக்காக கோரிக்கை வருவது மிகவும் வேதனையான உண்மை.

நீதி எல்லோருக்கும் பொதுவானது. வறுமை உட்பட பல்வேறு காரணங்களால் சாமானிய மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் லோக் அதாலத் உயரிய பணிகளை செய்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஜூன் மாதம் வரை 19 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்தியாவின் 4 திசைகளையும் தாண்டி, 8 திக்குகளில் உள்ள நகர மற்றும் கிராம பகுதிகள் என வேறுபடுத்தி வீடு, தேடிச் சென்று மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். நீதியை தேடிச் செல்லும் மக்களுக்கு உடனிருந்து உதவும் மையமாக லோக் அதாலத் விளங்கி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவருமான துரைசாமி, சென்னை உயர் நீதிமன்ற சட்ட சேவைகள் குழுத் தலைவர் ராஜா, கன்னியாகுமரி முதன்மை மாவட்ட நீதிபதி அருள்முருகன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் ராஜசேகர், எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x