Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 03:12 AM

இந்திய கப்பல் படைக்காக தயாரித்த போர்க்கப்பல் ரஷ்யாவில் வெள்ளோட்டம்

புதுடெல்லி

இந்திய கப்பல் படைக்காக தயாரிக்கப்பட்ட, துஷில் போர்க்கப்பல் ரஷ்யாவில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படைகளை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, கப்பல் படையில் இந்தியபோர்க்கப்பல்களுக்கு கவசமாகவும் பாதுகாப்பும் அளிக்கக் கூடிய 4 போர்க் கப்பல்களை வாங்க ரஷ்யாவிடம் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, 4 பி1135.6 ரக அதிநவீன போர்க் கப்பல்கள் தயாரிக்க முடிவானது. அவற்றில் 2 கப்பல்கள் ரஷ்யாவிலும் 2 கப்பல்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக ரஷ்யாவில் ஒரு கப்பல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ரஷ்யாவின் கலினின்கிரேட் நகரில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை கடலில் விடப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பால வெங்கடேஷ் வர்மா மற்றும் கப்பல் படையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள்கூறும்போது, ‘‘போர்க்கப்பல் களுக்குப் பாதுகாப்பாக பின்னால் செல்லும் அதிநவீன கப்பல்கள் ஏற்கெனவே இந்திய கப்பல் படையில் உள்ளன. தற்போது இந்திய கப்பல் படைக்காக தயாரிக்கப்பட்ட பி1135.6 ரக 7-வது கவச போர்க்கப்பல் கட்டி முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அடுத்த கட்டமாக அந்தக் கப்பலுக்குள் அதிநவீன கருவிகள், போர்த் தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் பொருத்தும் பணி தொடங்கும். இந்தக் கப்பலுக்கு ‘துஷில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருதத்தில் அதற்கு ‘பாதுகாப்பு கவசம்’ என்று பொருள்’’ என்று தெரிவித்தனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் முதல் 2 கப்பல்கள் வரும் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை கப்பல்கள் போர்க் கப்பல்களின் பின்னால் சென்று பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். அத்துடன் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து தாக்கும். தவிர தரை, வான் உட்பட எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x