Published : 29 Oct 2021 07:27 PM
Last Updated : 29 Oct 2021 07:27 PM
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு திறமைகளை ஒருசேரப் பெற்ற கலைஞர் புனித் ராஜ்குமார் நம்மைவிட்டு சீக்கிரமாகவே மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரை தாங்கும் வலிமையை இறைவன் நல்குவாராக எனப் பதிவிட்டுள்ளார்.
Multi-talented artist #PuneethRajkumar ji left us too soon. Deepest Condolences to his family and all of his fans, may lord give them strength to bear with the pain.
பலத்த மாரடைப்பு:
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பல்வேறு கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படுகிறார்.
இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
கன்னடத் திரையுலகில் மூத்த நடிகரான மறைந்த ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் புனித் ராஜ்குமார். இவருடைய மனைவியின் பெயர் அஸ்வினி. த்ரிதி மற்றும் வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய அண்ணன் சிவராஜ்குமாரும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT