Published : 29 Oct 2021 09:22 AM
Last Updated : 29 Oct 2021 09:22 AM

ஆசியான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா: உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி

ஆசியான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், அதன் முன்னிலைக்கும் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் 18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஆசியான் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவானது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. நமது கலாச்சாரம், பழக்க வழக்கம், மொழிகள், எழுத்துகள், கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் இருந்தே நாம் இதனை அறிந்து கொள்ளலாம். எனவேதான், ஆசியான் நாடுகளுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை வழங்குகிறது. அதேபோல, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கைக்கு ஆசியான் கூட்டமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது. அதுமட்டுமின்றி, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கும் அக்கூட்டமைப்பு உதவியாக உள்ளது. இதற்காக, இந்த தருணத்தில் ஆசியான் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2022-ம் வருடமானது ஆசியான் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான 30-வது ஆண்டு உறவை குறிக்கிறது. அதே வேளையில், இந்தியாவும் தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, 2022-ம் ஆண்டினை ஆசியான் – இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

தற்போது கரோனா பரவலால் எழுந்துள்ள சவால்களை நாம் அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம். அதே சமயத்தில், இந்தியா – ஆசியான் கூட்டமைப்புக்கு இடையேயான உறவுக்கும் கரோனா சூழல் சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து வெற்றிக் கொள்ள வேண்டும். நமது உறவை எதிர்காலத்திலும் வலுப்படுத்துவற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆசியான் நாடுகளின் ஒற்றுமைக்கும், அதன் முன்னிலைக்கும் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

ஆசியான் கூட்டமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்டவை இக்கூட்டமைப்பில் நட்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐதென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' சார்பில் 18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

படம்: பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x