Published : 28 Oct 2021 05:54 PM
Last Updated : 28 Oct 2021 05:54 PM
ராஜஸ்தானில் தேர்வு மையத்தில் பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு கண்ணியக்குறைவாக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் மாநில அரசு ஊழியர் தேர்வுகளுக்கான முதல் கட்ட போட்டித் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு மையங்களில் பெண் விண்ணப்பதாரர்கள் மோசமாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளன.
பிகானிர் என்ற பகுதியில் தேர்வு மையத்தில் பெண் விண்ணப்பதாரர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளிவந்தது. தேர்வு மைய வளாகத்திற்கு வெளியே ஆண் பாதுகாவலர் பெண் விண்ணப்பதாரர் அணிந்திருந்த மேல் சட்டைத் துணிகளின் கைப்பகுதிகளை வெட்டியதாகக் கூறப்படுகிறது. முழுக்கை சட்டை அணிந்த ஆண்கள் சட்டையைக் கழற்றிவிட்டு தேர்வு எழுத தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பெண் தேர்வர்களுக்கு நடைபெற்ற மோசமான சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் (NCW) ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் குமார் ஆர்யாவுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கான தேர்வு மையங்களில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சியடைந்துள்ளது.
பெண்களை இதுபோன்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது முற்றிலும் அவமானகரமானது. பெண்களுக்கு நேர்ந்த இந்த வெட்கக்கேடான இச்சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
பெண்களின் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறிய குற்றவாளிகள் மீது ராஜஸ்தான் மாநில அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு மையத்தில் தேர்வு எழுத வரும் பெண் விண்ணப்பதாரர்களை சோதனை செய்வதற்கு பெண் காவலர் ஏன் நியமிக்கப்படவில்லை? என்பதற்கான விளக்கமும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா தனது கடித்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் கண்டனம்
ரேகா சர்மா தனது ட்விட்டர் தளத்தில் சம்பந்தப்பட்ட படம் வெளியான நாளிதழ் கிளிப்பிங்கை வெளியிட்டு இதுபோன்ற உத்தரவுகளை நிறுத்துமாறு ராஜஸ்தான் முதல்வரை கேட்டுள்ளார். இதுகுறித்து ரேகா சர்மா பக்கத்தில் கூறுகையில், ''ஏமாற்றுவதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் பெண்களின் ஆடைகளை எப்படி வெட்ட முடியும்? இது கொடுமையானது.
அசோக்கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்) இந்த உத்தரவை நீங்கள் நிறுத்த வேண்டும்.'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT