Published : 27 Oct 2021 12:44 PM
Last Updated : 27 Oct 2021 12:44 PM
பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் செயல்படும்.
இந்த வல்லுநர்கள் குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவிந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசோக் ஜோஷி, டாக்டர் சந்தீப் ஓப்ராய், குஜராத் காந்தி நகர் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பேராசிரியர் டாக்டர் பி. பிரபாகரன், மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் அஸ்வின் அனில் குப்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.
இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர் கில்ட் ஆஃப் இந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கின் வாதத்தின்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த பிரமாணப் பத்திரத்தில், “பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஆதலால், வல்லுநர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்வது அவசியம். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
மனுதாரர்கள் கோரியபடி, பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. மத்திய அரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தி மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா, இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்தத் தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
''சமூகத்தில் பல்வேறு வகையான மக்களைக் கண்காணிக்க இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருளை வைத்து மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வல்லுநர்கள் குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கிறோம்.
இந்த விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தால், இந்த உத்தரவை நாங்கள் பிறப்பித்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. பெகாசஸ் குற்றச்சாட்டை மத்திய அரசு எந்தவிதத்திலும் மறுக்கவில்லை.
தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வரும் மத்திய அரசுக்கு அனைத்திலும் விலக்கு அளிக்க முடியாது. நீதித்துறை மறு ஆய்வுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பைக் காரணம் கூறி சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது. இங்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும், நீதிமன்றத்தை வாய்மூடிப் பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது.
மக்களின் அந்தரங்க உரிமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவை உளவு பார்க்கும் விஷயத்தில் முழுமையாக மீறப்பட்டுள்ளன. உளவு பார்க்கப்பட்ட விவகாரம், அறிக்கை போன்றவை மற்ற நாடுகளில் தீவிரமாக எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளின் உளவு மென்பொருள் மூலம் கண்காணிப்புக்குப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விரிவாகத் தெரிவிக்க பல வாய்ப்புகளை மத்திய அரசுக்கு நாங்கள் அளித்தோம். ஆனால், மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அடுத்தடுத்த வாய்ப்புகளில் பிரமாணப் பத்திரத்தில் தெளிவான விளக்கம் இல்லை. இதைத் தெளிவுபடுத்தியிருந்தால் எங்களின் சுமை குறைந்திருக்கும்.
எந்தவிதமான விளக்கம் தராமல் மத்திய அரசு மறுப்பது என்பது போதுமானதாக இருக்காது. இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். அதனால்தான் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கிறோம்.
இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன, வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது அதைப் பாதுகாக்காமல், தடுக்காமல் நாங்கள் இருக்க முடியாது. அந்தரங்க உரிமை என்பது விவாதிக்கப்பட வேண்டியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்ளுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் உரியது. அனைத்து முடிவுகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டு எடுக்கப்பட்டது''.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT