Published : 27 Oct 2021 09:05 AM
Last Updated : 27 Oct 2021 09:05 AM
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, யாருக்கெல்லாம் குடிப்பழக்கம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியது பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல், பிரியங்கா, மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, யாருக்கெல்லாம் இங்கே குடிப்பழக்கம் இருக்கிறது என்று வினவினார். அதற்கு, கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் வளைந்து நெளிய, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மட்டும் என் மாநிலத்தில் பலரும் குடிப்பழக்கம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் எனப் பொதுவாக ஒரு பதிலைச் சொன்னார். ராகுலின் இந்தக் கேள்வி தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூட்டத்தில் இருந்தவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2007ல் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஒன்றில், ராகுல் காந்தி குடிப்பழக்கம் இல்லாதோருக்கு தான் உறுப்பினர் அந்தஸ்து என்ற விதிமுறையின் நடைமுறை சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், நேற்றைய கூட்டத்தில் அவரே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். உறுப்பினர்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டிருக்கக் கூடாது என்ற விதிமுறை காங்கிரஸில் மகாத்மா காந்தி காலத்தில் இருந்தே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கவுள்ள காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் என கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சூர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
அண்மையில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர, காதி ஆடைகளை அணிதல், மது வகைகளையும் குடிக்கமாட்டேன், போதை மருந்துகளை தவிர்த்தல், மதச்சார்பின்மையுடன் இருத்தல், சமூகரீதியான பாகுபாட்டை எந்தரீதியிலும் , எந்தவடிவத்திலும் பின்பற்றாமல் இருத்தல், கட்சி ஆணைக்கு இணங்கி கட்சிக்காக பணி செய்தல், சொத்துக் குவிப்பில் ஈடுபடாமல் இருத்தல், கட்சியை பொதுவெளியில் விமர்சிக்காமல் இருத்தல் போன்ற நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றைய கூட்டத்தில் பேசிய சோனியாவும், "அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இப்போதே தயாராக வேண்டும்.
ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்று மையை கட்சியினர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறந்து கட்சியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT