Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை: கட்சித் தலைவர் சோனியா காந்தி வருத்தம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல், பிரியங்கா, மாநிலகாங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து கட்சியின் தலைமை நாள்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கைகள்கட்சியின் கடைநிலை தொண்டர்களை சென்றடையவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்பதை தெளிவாக உணர முடிகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, பதிலடி கொடுக்க கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். கட்சியின் உயரிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த காலங்களில் அநீதி, சமத்துவமின்மைக்கு எதிராக போராடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு போராட வேண்டும்.

நாட்டின் அரசமைப்பு சாசனங்களை மோடி அரசு படிப்படியாக அழித்து வருகிறது. இதனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். சிறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸார் போராட வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இப்போதே தயாராக வேண்டும்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்று மையை கட்சியினர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறந்து கட்சியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x