Published : 26 Oct 2021 10:42 AM
Last Updated : 26 Oct 2021 10:42 AM
2022-ம் ஆண்டு நடக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
2022-ம் ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இப்போதிருந்தே காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் அதைத் தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது.
இது தவிர கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்தும் ஆட்சி அமைக்கவிடாமல் பாஜக தடுத்துவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்கள் கிடைப்பதற்காகக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா காந்தி அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் அரசு தோல்வி அடைந்த பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறி மக்களிடம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரியங்கா காந்தி முயன்று வருகிறார். உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாதியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் முயன்று வருகின்றன.
இந்தச் சூழலில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் இன்று தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “5 மாநிலத் தேர்தல், காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிகள், போராட்டங்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்தை வழிநடத்துவார். 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தனர்.
கடந்த 16-ம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்துவது என்றும், நவம்பர் 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் பிற அமைப்புகளான இளைஞர் காங்கிரஸ், மாணவர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், சமூக ஊடகப் பிரிவு ஆகியவை அடுத்த தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் எனத் தீர்மானம் இயற்றியுள்ளன. இந்தத் தீர்மானம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT