Published : 25 Oct 2021 07:31 PM
Last Updated : 25 Oct 2021 07:31 PM

‘‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’’- பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்

வாரணாசி

கிராமபுற மக்களின் கடின உழைப்பு காரணமாக உருவாகும் எந்தப் பொருளும் உள்ளூர் பொருளாகும், இத்தகைய பொருட்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஊக்கப்படுத்தி ஆதரவளிப்பது அவசியம் என நரேந்திர மோடி கூறினார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி நாடு மிகப் பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது . இந்திய சுதந்திரத்திற்குப் பின் மிக நீண்ட காலத்திற்கு சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு போதிய கவனம் பெறவில்லை, இதனால் குடிமக்கள் முறையான சிகிச்சைக்கு அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தனர்.

இது நிலமை மோசமாகவும் நிதிச்சுமைக்கும் வழி வகுத்தது. இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை குறித்து நடுத்தர வகுப்பினர் மற்றும் ஏழை மக்களின் இதயங்களில் தொடர்ச்சியான கவலை நிலைகொண்டது. நீண்ட காலத்திற்கு நாட்டின் அரசுகளில் நீடித்திருந்தவர்கள் நாட்டின் சுகாதார கவனிப்பு முறையின் அனைத்து நிலை வளர்ச்சிக்கு பதிலாக வசதிகளின் சீரழிவுக்கு இட்டுச்சென்றனர்.

இந்தக் குறைபாடுகளைக் களைவது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தின் நோக்கமாகும். அடுத்த 4-5 ஆண்டுகளில் கிராமத்திலிருந்து ஒன்றியத்திற்கும், மாவட்டத்திற்கும், பிராந்தியத்திற்கும் தேசிய நிலைக்கும் முக்கியமான சுகாதார கவனிப்பு வலைப்பின்னலை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள பல வகையான இடைவெளிகளைப் போக்குவதற்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கம் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது . முதலாவது அம்சம் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு விரிவான வசதிகளை உருவாக்குவது தொடர்பானது.

இதன்படி நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வசதிகளுடன் கிராமங்களிலும் நகரங்களிலும் சுகாதார மற்றும் உடல் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் கட்டணமின்றி மருத்துவ ஆலோசணை, கட்டணமின்றி பரிசோதனைகள், விலை இல்லாமல் மருந்து போன்ற வசதிகள் கிடைக்கும். கடுமையான உடல் நோய்க்கு 600 மாவட்டங்களில் புதிய தீவிர சிகிச்சை தொடர்பாக 35,000 படுக்கைகள் அதிகரிக்கப்படும், பரிந்துரை வசதிகள் 125 மாவட்ங்களில் அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது அம்சம், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனை வலைப்பின்னல் தொடர்புடையதாகும். இந்த இயக்கத்தின் கீழ் நோய்களைக் கண்டறியவும் கண்காணிப்பதற்கும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும். நாட்டின் 730 மாவட்டங்கள் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக் கூடங்களைப் பெற்றிருக்கும். 3 ஆயிரம் ஒன்றியங்கள் ஒன்றிய பொது சுகாதார அலகுகளைக் கொண்டிருக்கும். இவைத் தவிர நோய்க் கட்டுப்பாட்டுக்கான 5 மண்டல தேசிய மையங்கள், 20 பெருநகர அலகுகள், 15 உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான பரிசோதனைக் கூடங்கள் இந்த வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும்.

மூன்றாவது அம்சம், பெருந்தொற்றுகள் பற்றி ஆய்வு செய்யும் தற்போதுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாகும். தற்போது செயல்படும் 80 வைரஸ் நோய் கண்டறிதல் மற்றும் ஆய்வுக்கூடங்கள் வலுப்படுத்தப்படும், உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான 15 பரிசோதனைக் கூடங்கள் செயல்பாட்டுக்கு வரும், வைரஸ் தொடர்பான ஆய்வுக்கு 4 புதிய தேசிய கல்விக் கழகங்களும், உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல துறை ஒத்துழைப்புக்கும் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் தொடர்பான சுகாதார ஆய்வுக்கு தேசிய கல்விக் கழகமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வலைப்பின்னலில் தெற்காசியாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பும் வலுப்படுத்தப்படும்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தின் மூலம் சிகிச்சை முதல் முக்கியமான ஆராய்ச்சி வரையிலான சேவைகளுக்கு ஒட்டு மொத்த சூழல் நாட்டின் அனைத்து இடங்களிலும் உருவாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.

சுகாதாரத்துடன் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது ஒட்டு மொத்த சுகாதார கவனிப்பு . தூய்மை இந்தியா இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா, ஊட்டச்சத்து திட்டம், இந்திர தனுஷ் இயக்கம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை நோயிலிருந்து காப்பாற்றியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் மூலம் சுகாதாரம் சார்ந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது.

ஏழைகள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், நடுத்தர வகுப்பினரின் வலிகளைப் புரிந்து கொண்டதாக இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகள் இருக்கின்றன. நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம்.

உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற நாட்டு மக்களின் உணர்வை பாராட்டுகிறேன். உள்ளூர் பொருட்கள் என்பதற்கு அகல் விளக்குகள் போன்ற ஒரு சில பொருட்கள் என்று அர்த்தமாகாது. கிராமபுற மக்களின் கடின உழைப்பு காரணமாக உருவாகும் எந்தப் பொருளையும் குறிப்பதாகும். இத்தகைய பொருட்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஊக்கப்படுத்தி ஆதரவளிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x