Published : 24 Oct 2021 07:03 PM
Last Updated : 24 Oct 2021 07:03 PM
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகமே எதிர்பார்த்திருக்கும் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சற்று நேரத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன,
இரு அணிகளும் கடைசியாக 2019 இல் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடியது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்று மாலை கிரிக்கெட் ஆடுகளத்தில் சந்திக்கின்றன என்பதால் வழக்கமான ஆர்வத்தைவிட பலமடங்கு உற்சாகத்தில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவையில்லை என்ற கருத்தும் நிலவிவருகிறது. காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்றுவரும் இவ்வேளையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது தேச நலனுக்கு எதிரானது என்று பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்.
அது அமைதியைத் தரும். இந்தப் போட்டியால் நாம் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா சிறப்பாக செயல்பட்டு போட்டியில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT