Published : 24 Oct 2021 02:02 PM
Last Updated : 24 Oct 2021 02:02 PM
இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் வாழ்வில் நம்பிக்கை என்ற ஒளியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மாதத்தோறும் வானொலி வாயிலாக அவர் உரையாற்றுகிறார். அந்த வகையில் அக்டோபர் மாதத்துக்கான உரையை அவர் இன்று நிகழ்த்தினார்.
82வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த பண்டிகை காலத்தில் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் வீட்டை தூய்மைப் படுத்தி அண்டைவீட்டையும், தெருவையும் அசுத்தப் படுத்தாதீர்கள். அதேபோல் ஒரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் விட்டொழிக்க வேண்டும். அக்டோபர் மாதம் முழுவதுமே பண்டிகைதான். தீபாவளி, கோவர்த்தன் பூஜா, பாய் பூஜா, சத் பூஜா என பூஜைகளுக்குக் குறைவில்லை.
நவம்பரில் குரு நானக் தேவ் பிறந்தநாள் விழா வருகிறது. இந்தப் பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் வாழ்வில் நம்பிக்கை என்ற ஒளியை ஏற்றுவீர்களாக. உங்கள் சமூகவலைதள பக்கங்களில் நீங்கள் வாங்கும் உள்ளூர் பொருட்களின் புகைப்படங்கள் விவரத்தைப் பகிர்ந்து மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டுகிறேன். இந்த முறை உள்ளூர் பொருட்களுக்கான நமது குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நம்மால் முடியும் என்பதை நிரூபித்தோம்:
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "100 கோடி தடுப்பூசி இலக்கை 9 மாதங்களில் எட்டிப்பிடித்து நாம் சாதனை படைத்துள்ளோம். இதன் மூலம் நாம் நமது கூட்டு முயற்சியை நிரூபித்துள்ளோம். அனைவரின் கூட்டு முயற்சியையும் ஒருங்கினைப்பதில் நமது திறனை நாம் நிரூபித்துள்ளோம். இதனால் தடுப்பூசி திட்டத்தில் நாம் புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறோம் என்று தெரிவித்தார்.
இரும்பு மனிதர் படேலுக்கு நான் தலைவணங்குகிறேன்..
"அடுத்த வாரம் அக்டோபர் 31 ஆம் தேதி தேசம் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறது. இரும்பு மனிதர் படேலுக்கு நான் தலைவணங்குகிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். "ஒன்றுபட்டு இருந்தால் தான் தேசபக்தி மேலோங்கும். அப்போதுதான் நாம் நாட்டை மிகப்பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். நாம் ஒன்றிணைந்து இல்லையென்றால் சிக்கலும், சங்கடங்களுமே உருவாகும்" என்று படேல் சொல்லியிருக்கிறார். அந்த கூற்றின்படி நாம் நடப்போம்.
அண்மையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சர்தார் படேலின் வாழ்க்கை சரித நூலை வெளியிட்டுள்ளது. அந்த நூலை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் படித்து ஒற்றுமை உணர்வைப் பெற வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT