Published : 23 Oct 2021 10:42 AM
Last Updated : 23 Oct 2021 10:42 AM
பிஹாரின் லாலு தலைமையிலான மெகா கூட்டணி முறிந்ததாக அம்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இங்கு சட்டப்பேரவையின் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் லாலு, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.
பிஹாரின் தாராபூர், குஷேஸ்வர்ஸ்தான் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 30இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவ்விரண்டிலும், அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தனது வேட்பாளர்களைப் போட்டியிட வைத்துள்ளது.
காங்கிரஸும் அந்த இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மனுசெய்ய வைத்தது. இதனால், லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் பிஹார் மாநிலக் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில், இதன் இறுதிக்கட்டத்திலும் முடிவு ஏற்படாமல் இருக்கவே மெகா கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் காங்கிரஸின் பொறுப்பாளர் பக்தி சரண் தாஸ் கூறும்போது, ''ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இனி காங்கிரஸ் உறுப்பினர் அல்ல. 2024இல் மக்களவைத் தேர்தலிலும் பிஹாரில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.
இடைத்தேர்தலின் தொகுதிகளிளும் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம். கட்சியின் வெற்றிக்காக காங்கிரஸின் இளம் தலைவர்களான கன்னய்யா குமார், ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் ஆகியோர் தீவிரப் பிரச்சாரம் செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.
பிஹாரில் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸுடன் ஆர்ஜேடி தலைவர் லாலு கூட்டணி வைத்திருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணியை வெல்ல மெகா கூட்டணி அமைத்திருந்தார் லாலு.
இதில், வெறும் 15 தொகுதிகள் வித்தியாசத்தில் லாலுவின் மகனான தேஜஸ்வீ யாதவ் முதல்வராகும் வாய்ப்பை இழந்தார். இதற்கு காங்கிரஸுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முறையாகப் பிரச்சாரம் செய்யாமல் கிடைத்த தோல்வி காரணம் என புகார் எழுந்தது.
தற்போது, பிஹாரின் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவும் ஆதரவளித்துள்ளார். இதனால், மும்முனைப் போட்டி இடைத்தேர்தலில் நிலவுகிறது. எனினும், இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி, தோல்வியால் பிஹாரின் ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழாது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து இரண்டையும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கைப்பற்றும் என எதிர்நோக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...