Published : 22 Oct 2021 10:30 AM
Last Updated : 22 Oct 2021 10:30 AM
100 கோடி கரோனா தடுப்பூசி சாதனை புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2021, ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட கரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், நேற்று (அக்.22 ஆம் தேதி) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த சாதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையிலிருந்து சில துளிகள்:
100 கோடி கரோனா தடுப்பூசி சாதனை புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு. புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது. உலகளவில் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டபோது, இந்தியா குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா எப்படி தடுப்பூசியைப் பெறும், எப்படி தடுப்பூசியை செலுத்தும் என்றெல்லாம் பேசினார்கள். அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்துள்ளது 100 கோடி தடுப்பூசி சாதனை. ஆனால், இன்று இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் தான் 100 கோடி தடுப்பூசி மைல்கல் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தடுப்பூசித் திட்டத்தில் விஐபி கலாச்சாரத்துக்கு நாம் இடம் கொடுக்கவில்லை. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கியுள்ளோம். கடைக்கோடி மக்களுக்கும் கூட கரோனா தடுப்பூசியை நாம் கொண்டு சேர்த்துள்ளோம். இதற்காக நாம் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலுமாக அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளம் மக்களிடம் தடுப்பூசித் திட்டத்தைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது. கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளித்த நம்மால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT