Last Updated : 21 Oct, 2021 06:08 PM

 

Published : 21 Oct 2021 06:08 PM
Last Updated : 21 Oct 2021 06:08 PM

கன்னடப் படம் இயக்கிய தமிழருக்கு சர்வதேச அங்கீகாரம் கர்நாடகாவில் புறக்கணிக்கப்படுவதாக வருத்தம்

இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆசிய தலைவர் மார்க் பெர்ல்ட் இயக்குநர் கு.கணேசனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பெங்களூரு

'நம்ம மகு' என்ற கன்னட திரைப்படத்தை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குநர் கணேசனுக்கு இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகமும், ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச திரைப்படவிழாவில் 'நம்ம மகு' திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி திரையிடப்படப்பட்டது. அதில் 'நம்ம மகு' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆசியாவுக்கான தலைவர் மார்க் பெர்ல்ட் இயக்குநர் கு. கணேசனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் கு.கணேசன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

நான் கடந்த 30 ஆண்டுகளில் 'மண்ணின மக்களு', 'ஆஷா ஜோதி' உட்ப‌ட 11 கன்னட திரைப்படங்களையும், 'போர்க்களத்தில் ஒரு பூ', 'காதல் செய்' உள்ளிட்ட 3 தமிழ் திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன். அண்மையில் பெண் குழந்தைகள் கடத்தல் குறித்து கன்னடத்தில் 'நம்ம மகு' (நம் குழந்தை) என்ற திரைப்படத்தை இயக்கினேன்.

அந்தத் திரைப்படம் லண்டன், பிரான்ஸ் உட்ப‌ட 23 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது.

'நம்ம மகு' திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைத்தாலும் கர்நாடக அரசு அதற்கான‌ அங்கீகாரமும், குழந்தைகள் திரைப்படத்துக்கு வழங்கும் மானியத்தையும் வழங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

குறிப்பாக குழந்தைகள் படத்துக்காக வழங்கப்படும் விருது கூட புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழியை பேசும் ஒருவனுக்கு கர்நாடக அரசின் விருது கிடைத்துவிடக்கூடாது என எனக்கு எதிராக சதி செய்கின்ற‌னர். அதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

இவ்வாறு இயக்குநர் கு.கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x