Published : 21 Oct 2021 10:49 AM
Last Updated : 21 Oct 2021 10:49 AM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில், 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தி வருகிறது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது. எனவே அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்த முடிவு செய்யப்பட்டு தடுப்பூசிக் கொள்கையில் கடந்த ஜூன் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.21) காலையில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
India scripts history.
We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.
Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury— Narendra Modi (@narendramodi) October 21, 2021
மத்திய சுகாதார அமைச்சர் வாழ்த்து:
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்ட பக்கத்தில் வாழ்த்துகள் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இது சாத்தியமானது என்று பதிவிட்டுள்ளார்.
இன்று பகல் 12.30 மணியளவில் 100 கோடி தடுப்பூசி மைல்கல்லை எட்டியதை சிறப்பிக்கும் வகையில் பாடல் ஒன்றையும் ஆடியோ விஷுவல் ஒன்றையும் சுகாதார அமைச்சர் வெளியிடுகிறார்.
தடுப்பூசி செலுத்துவதில் நிலைத்தன்மை முக்கியம்:
இது குறித்து, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் அளித்துள்ள பேட்டியில், "100 கோடி தடிப்பூசி என்ற சாதனை இலக்கை அடைய உதவிய மக்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி. 9 மாதங்களில் இதனை நாம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, 75% பேருக்கு முதல் தவணை கரோனா செலுத்தப்பட்டுள்ளது. 25% பேர் தடுப்பூசி பெற தகுதியிருந்தும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இல்லை. முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களை குறிவைத்து தடுப்பூசியை செலுத்த வேண்டும். இதுவரை 30% பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
தடுப்பூசி செலுத்துவதில் நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியமானது. இரண்டாவது டோஸை தவறவிட்டவர்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் இந்த சாதனைக்கு உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ராபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகள்:
100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் எந்தெந்த தடுப்பூசிகள் போடப்படுகின்றன எனப் பார்ப்போம். சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் காமாலேயா ரிசேர்ச் மையம் கண்டுபிடித்த ஸ்புட்னிக் V, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், ஜடைல் கேடில்லா மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அரசுத் தரப்பில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT