Published : 20 Oct 2021 05:07 PM
Last Updated : 20 Oct 2021 05:07 PM
நாடு முழுவதிலும் இருந்து தென் மேற்கு பருவ மழை வரும் 26-ம் தேதிக்குள் முழுமையாக விடைபெற்று, வடகிழக்குப் பருவமழைக்கான வழிவிடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது, ஏறக்குறைய நான்கரை மாதங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழையைக் கொடுத்து தற்போது விடைபெறும் நிலையில் இருக்கிறது. கடந்த 6-ம் தேதி முதல் பருவமழை படிப்படியாக விடைபெறத் தொடங்கியுள்ளது. கடந்த 1975-ம் ஆண்டுக்குப்பின் தென் மேற்கு பருவமழை தாமதமாக விடைபெறுகிறது. வழக்கமாக செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல்வாரத்தில் விடைபெற்றுவிடும்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென் மேற்கு பருவமழை தாமதமாக விடைபெற்றாலும், சில இடங்களில் இன்னும் மழையைக் கொடுத்து வருகிறது. தற்போது கோஹிமா, சில்சார், கிருஷ்ணாநகர், பாரிபாடா, மல்காங்கிரி, நல்கொண்டா, பாகல்கோட், வென்குர்லா ஆகிய இடங்களில் இருந்துபருவமழை விடைபெற்றுவிட்டது.
இந்தநிலையில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முழுமையாக பருவமழை விடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூடுதலாகியுள்ளன. ஒட்டுமொத்த வங்கக்கடல், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், ஒடிசா, வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், ஆந்திராவின் சில பகுதிகள், தெலங்கானா, கோவா, கர்நாடகாவின் சில பகுதிகள், அரபிக்கடலின் மத்தியப் பகுதிகளில் இருந்து 23-ம் தேதிக்குள் பருவமழை விடைபெறும்.
வங்கக் கடலில் வடகிழக்கு காற்று உருவாதற்கான சூழல் இருப்பதால், தென்மேற்குபருவமழை வரும் 26-ம் தேதிக்குள் நாடுமுழுவதிலிருந்தும் இருந்து விடைபெறும். அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை தென்கிழக்கு பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த வடகிழக்குப் பருவமழையால் தமிழகம், கேரளாவின் சிலபகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பலன் பெறும்.இருப்பினும் 20-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT