Last Updated : 20 Oct, 2021 05:04 PM

3  

Published : 20 Oct 2021 05:04 PM
Last Updated : 20 Oct 2021 05:04 PM

பாஜகவுடன் கூட்டணி; அமரீந்தர் சிங் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார்: காங்கிரஸ் விமர்சனம்

அமரீந்தர் சிங் | கோப்புப் படம்.

சண்டிகர் (பஞ்சாப்)

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி அறிவித்து தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங் புதுடெல்லி சென்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்தபிறகு பாஜகவில் சேர்வததாக ஊகங்கள் எழுந்தன. எனினும் இதுநாள் வரை காங்கிரஸிலிருந்து விலகாத நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான தனது திட்டத்தை நேற்று அவர் வெளியிட்டார்.

அமரீந்தர் சிங்கின் இந்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா இன்று கூறியதாவது:

அமரீந்தர் சிங் மீதும் அவரது வாரிசுகள் மீதும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர் மீது சில அழுத்தங்கள் இருக்க வேண்டும். அதனால்தான் அமரீந்தர் தற்போது சந்தர்ப்பாவாதியாக மாறியுள்ளார்.

பஞ்சாப் எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை அதிகரிப்பதற்கு அவர்தான் காரணம். 1984-இல் ராஜினாமா செய்த பிறகு பாகிஸ்தானுடனான அவரது உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா

அமரீந்தர் சிங் 1965 இல் தேசத்திற்காக போராடினார், அவர் இன்றைய நிலைமையை நன்கு அறிவார். அப்படி தெரிந்த நிலையில் இன்று கேப்டன் பஞ்சாபிற்கு துரோகம் இழைத்துவிட்டார். சீனாவையும் பாகிஸ்தானையும் கண்டுகூட பஞ்சாப் பயப்படவில்லை. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங்தான் இன்று பஞ்சாப் மக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.

காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அவரது முடிவு குறித்து எங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை. தனது புதிய கட்சியுடன் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அறிவித்துள்ளதன் மூலம் அமரீந்தர் சிங் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிட்டார்.

கேப்டனை விட தேசபக்தி எனக்கு அதிகம் உண்டு. அமரீந்தர் சிங் விவசாயிகளை சந்தித்ததில்லை. அவர் அவர்களுக்காக ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. நான் அவருடன் அதிக நேரம் செலவிட்டதற்கு வருத்தமாக இருக்கிறது.

இவ்வாறு சுக்ஜிந்தர் சிங் ரந்தவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x