Published : 20 Oct 2021 09:37 AM
Last Updated : 20 Oct 2021 09:37 AM

பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாயை எட்டினால் டூவீலரில் 3 பேர் செல்ல அனுமதி: அசாம் பாஜக தலைவர் பேச்சு

கோப்புப்படம்

குவஹாட்டி

பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாயை எட்டினால், அசாம் மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் விலைஅதிகரி்த்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலத் தலைநகரங்களில் பெட்ரோல் விலைலிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது, 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை லிட்டர் 100 ரூபாையக் கடந்துவிட்டது.

இந்த சூழலில் அசாமின், துமுல்பூர் நகரில் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா நேற்று பேட்டியளித்தார்.

பாஜக தலைவர் பாபேஷ் கலிதா

பாபேஷ் கலிதா முன்னாள் அமைச்சரா இருந்தவர், கடந்த ஜூன் மாதம்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கூறுகையில் “ பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாயைத் தொட்டால், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதற்கு அசாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அனுமதி அரசிடம் பெறப்படும்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் பாபேஷ் கலிதாவின் பேச்சை காங்கிரஸ் கட்சி விமர்சித்து, கிண்டல் செய்துள்ளது. காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பபிதா சர்மா கூறுகையில் “ ஆளும் பாஜக அரசில் கட்சியின் தலைவராக இருக்கும் பாபேஷ் கலிதா இதுபோன்ற நகைப்புக்குரிய, வித்தியாசமான கருத்தைக் கூறியது எங்களுக்கு கவலையாக இருக்கிறது. விளையாட்டுக்காக இவ்வாறு பேசினாரா அல்லது நகைச்சுவை செய்தாரா அல்லது உண்மையிலேயே அவர் இந்தகருத்தைக் கூறினாரா.

என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சமானிய மக்கள் படும் துன்பத்தை உணராமல் இவ்வாறு முட்டாள்தனமாகப் பேசி, அவமதித்துள்ளார்.

பாஜக தலைவர் கலிதாவுக்கு நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை. பாஜகவினர் எதிர்்கட்சியாக இருந்தபோது பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டப்போகிறது எனக் கூறி போராட்டம் நடத்தினார்கள்
நல்லகாலம் பிறக்கப் போகிறது என்று பிரதமர் மோடி வாக்குறுதியளித்தது நினைவிருக்கிறதா.

பாஜக தலைவர்களும், தொண்டர்களும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், வெங்காயம் விலை உயர்வைக் கண்டித்தும் எவ்வாறு போராட்டம் நடத்தினார்கள், சாலைமறியல் செய்தார்கள் என்பது நினைவிருக்கிறதா.

சாலையில் மாட்டுவண்டியில் வந்து எதிர்ப்பை பாஜகவினர் பதிவு செய்தது நினைவிருக்கிறதா. பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை நிலையாக வைத்திருப்பதற்கு பதிலாக, நாள்தோறும் விலை ஏற்றப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் அதன் பலன்களை நுகர்வோருக்கும், மக்களுக்கும் வழங்காமல் மத்தியஅரசே எடுத்துக் கொண்டது

இவ்வாறு பபிதா சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x