Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா (49) அறிவித்துள்ளார்.
உ.பி. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் அதிக முனைப்பு காட்டுவதற்கு, தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப் பட்டதே காரணமாகும்.
இங்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி உறுதி இல்லை என்பதால் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயங்குகிறது. எனினும் பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர்களால் பிரியங்காவே முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரியங்கா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டியிட வேண்டும். உ.பி. தேர்தலில் இம்முறை 40% இடங்கள் பெண்களுக்குஒதுக்கப்படும். அவர்களின் வெற்றிக்காகவும் காங்கிரஸ் முன்னின்றுபாடுபடும். பெண்களின் முன்னேற்றத்துக்காக கட்சி இம்முடிவை எடுத்துள்ளது” என்றார்.
இந்த முடிவுக்கான பின்னணியாக உ.பி.யில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை பிரியங்கா பட்டியலிட்டார். ஹாத்ரஸ் மற்றும் உன்னா வில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட சம்பவங்களை அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்களில் மாநில பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பிரியங்கா தீவிரமாக பங்கேற்றார். இதன்மூலம், பெண்களின் வாக்குகளை காங்கிரஸ் குறிவைத்துள்ள தாகத் தெரிகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உள்ளது.இதைவிட அதிகமாக 40% இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதாக, முதல் தேசிய கட்சியாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் உ.பி.யில் மிகவும் பலவீனமாகக் கருதப்படும் அக்கட்சியில் போட்டியிட தகுதியும் திறமையும்வாய்ந்த பெண்கள் முன்வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் உ.பி.யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் தற்போது காங்கிரஸுக்கு 6 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.
உ.பி.யில் வரவிருக்கும் தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட முடிவுசெய்துள்ளன. இதனால் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் வாக்குகள் பிரிந்து, ஆளும் பாஜகவுக்கு சாதகமான சூழலே தொடரும் என கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT