Published : 16 Mar 2016 02:09 PM
Last Updated : 16 Mar 2016 02:09 PM
பிப்ரவரி 9-ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய கூட்டத்தின் போது ‘முகமூடி அணிந்த வெளியாட்கள்’ இருவர் ஆட்சேபத்துக்குரிய கோஷங்களை எழுப்பியதாக உயர்மட்ட விசாரணை கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த ‘வெளியாட்களுக்கு’ நெருக்கமாக ஜே.என்.யூ. மாணவர்கள் முஜீப் காட்டூ, மொகமது காதிர் ஆகியோரும் இணைந்து ஆட்சேப கோஷம் எழுப்பியதாக இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தது துரதிர்ஷ்டமானது. இவர்கள்தான் சூழ்நிலையை தங்களது ஆட்சேபம் மிக்க உணர்ச்சிகர கோஷங்களினால் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளனர். வெளியிலிருந்து வந்த இந்த குழுவினால் ஜே.என்.யூ. மாணவ சமூகத்திற்கே அவமானம் ஏற்பட்டது.
வெளியாட்கள் நிகழ்ச்சியில் இருந்தது பாதுகாப்பு ஊழியரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மேலும் பல சாட்சியங்கள் உறுதி செய்தன. இந்த மாணவர் குழுக்களில் இருந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டனர். இவர்கள்தான் காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் மேலும் சில தேசவிரோத கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த வெளியாட்களுடன் ஜே.என்.யூ. மாணவர் முஜீப் காட்டூவும் இணைந்து இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கண்ணய்யா குமார் ஆட்சேபத்துக்குரிய கோஷம் எழுப்பியதாக குறிப்பிடவில்லை. கங்கா தாபாவுக்கு பேரணி வந்தவுடன் கண்ணய்யா குமார் இருந்ததாகவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஊர்வலத்தின் ஒரு பகுதியில் உமர் காலித், அஷுடோஷ், ராமா நாகா மற்றும் கண்ணய்யா குமார் இருந்தனர். இன்னொரு பகுதியில் ஜே.என்.யூ. மாணவர் சங்க இணைச்செயலர் மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர் சவுரவ் ஷர்மா, மற்றும் வினித் லால், ஷ்ருதி அக்னிஹோத்ரி இருந்தனர். இரு குழுக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ஆனால் பாதுகாப்பு படையினர் வளையம் ஏற்படுத்தியதால் மோதல் வன்முறையாகவில்லை” என்கிறது இந்த அறிக்கை.
மேலும், கண்ணய்யா குமார், ராமா, சவுரவ் ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளவில்லை என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஜே.என்.யூ. பேராசிரியர்கள் 5 பேர் அடங்கிய குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT