Published : 19 Oct 2021 10:47 AM
Last Updated : 19 Oct 2021 10:47 AM
பிரதமர் மோடி இரு விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசமாட்டார். ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு. மற்றொன்று லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு. இவை குறித்து பிரதமர் மோடி ஒருபோதும் பேசமாட்டார் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.1 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 17-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 19-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிஹார், கேரளா, கர்நாடகா, லடாக் ஆகிய மாநிலங்களில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மாநிலத் தலைநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐக் கடந்துவிட்டது.
விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் விலை 30 சதவீதம் உயர்ந்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், விமானங்களுக்குப் பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் விலையை விட கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைதான் 33 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விமானங்களுக்குப் பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.79 ஆக மட்டுமே இருக்கிறது. ஆனால், வாகனங்களுக்கான பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110க்கு மேல் சென்றுவிட்டது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பேசுகையில், “பிரதமர் மோடி இரு விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசமாட்டார். என்ன தெரியுமா. ஒன்று நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசவேமாட்டார். சீனா குறித்துப் பேசுவதற்கு பிரதமர் மோடி அஞ்சுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் பல்வேறு ஆப்ரேஷன்களில் கொல்லப்பட்டனர். ஆனால், வரும் 24-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் இந்திய மக்களின் உயிரில் 20-20 விளையாடுகிறது. காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது மத்தியில் பாஜக அரசின் தோல்வியைக் காட்டுகிறது. பிஹார் மாநிலத்தின் ஏழை தொழிளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கீழ் இருக்கும் உளவுத்துறை என்ன செய்கிறது. இது மத்திய அரசின் தோல்வியைக் குறிக்கிறது'' என்று ஒவைசி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT