Published : 19 Oct 2021 03:06 AM
Last Updated : 19 Oct 2021 03:06 AM
கேரளாவைச் சேர்ந்த விஜயன் எர்ணாகுளத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் இருக்கின்றன. இவருக்கு ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலா கிராமம்தான் பூர்வீகம். எர்ணாகுளத்துக்கு தொழில் நிமித்தமாக விஜயன் இடம்பெயர்ந்து 46 ஆண்டுகள் ஆகின்றன. சைக்கிளின் பின்னால் கேன் வைத்து டீ விற்பதில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கிய விஜயனின் அத்தனை சுக, துக்கங்களிலும் அவரது மனைவி மோகனாவும் உடன் பயணிக்கிறார். இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக கரோனா விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்த இந்த தம்பதியினர் இப்போது ரஷ்யாவுக்கு செல்கின்றனர். இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் விஜயன் கூறியதாவது:
வீட்டில் நான்தான் மூத்த பையன். அப்பா ரங்கநாத பிரபு சேர்த்தலாவில் டீக்கடை போட்டு இருந்தார். அப்பாவிடம் இருந்துதான் டீ போடுவதற்கு கற்றுக் கொண்டேன். தனியாக கடைபோட எர்ணாகுளத்துக்கு வந்தேன். ஆனால் அப்போதே எனக்குள் சுற்றுலா ஆசை தொடங்கிவிட்டது. எர்ணாகுளத்துக்கு டீக்கடை நடத்த வந்ததற்கே ஒரு காரணம் இருக்கிறது. வெளியூரை பார்க்க வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடுதான் அது. கொச்சினில் ரயில், விமானம், கப்பல் என அனைத்தையும் பார்க்கலாம் என்றுதான் இங்கு வந்தேன். எனக்கு பயணம் செய்வது ரொம்பப் பிடிக்கும். முதலில் சின்ன, சின்ன பயணங்கள் போக ஆரம்பித்தேன். டீக்கடையில் நானும், என் மனைவியும்தான் இருப்போம். வேலைக்கு ஆள் யாரும் வைத்துக்கொள்வதில்லை. வாழ்க்கையில் நாம் சம்பாதிப்பது மட்டும் வரவு கணக்கில் சேர்ந்துவிடாது. அதை அனுபவிக்கவும் வேண்டும்.
ஐந்து, ஆறு மாதங்கள் டீ விற்போம். கூடவே என் கடையில் காலை டிபனும் உண்டு. இதில் எல்லாம் ஓரளவு வருமானம் வந்ததும் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவோம். ஒரு வாரத்தில் இருந்து 15 நாள்கள் வரை தங்கி சுற்றிப்பார்த்துவிட்டு திரும்ப வருவோம். எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து, அர்ஜென்டினா என இதுவரை 24 நாடுகளைப் பார்த்துவிட்டோம். கடைசியாக 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் போனோம் இந்த கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்ய முடியவில்லை. இப்போது ரஷ்யாவுக்கு போகிறோம். வரும் 21-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை ரஷ்யாவில் இருப்போம். அங்கு அக்டோபர் புரட்சியை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அதைப் பார்க்கவே அங்கு செல்கிறோம்.
மற்ற டீக்கடைக்காரர்களைப் போல் நான்கு மணிக்கே கடை திறக்கமாட்டேன். ஆறரை மணிக்கு திறந்து, 11 மணிக்கு அடைத்து விடுவேன். சாயங்காலம் 3.30க்கு திறந்து, 7.30க்கு அடைத்து விடுவேன். வியாபாரம், சம்பாத்யம் எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதையே முதன்மையாக்கிக் கொண்டால் நமக்கான வாழ்க்கையை எப்போது வாழ்வது? என் கடை வருடத்துக்கு 220 நாள்கள் மட்டுமே இயங்கும். ஞாயிற்றுக்கிழமை, மத்திய, மாநில அரசுகளின் அனைத்து விடுமுறைகளிலும் நானும் கடையை அடைத்துவிடுவேன்.
கடந்த இரு ஆண்டுகளில் கரோனாவால் பெரும்பாலான நாட்கள் கடை அடைத்திருந்ததால் இந்த பயணத்துக்கு டிராவல் ஏஜென்ஸியிடம் இருந்தே கடன் பெற்றேன். திரும்பி வந்ததும் மாதந்தோறும் மீதம் பிடித்து கடனை அடைப்பேன். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்து பேரன், பேத்திகளும் எடுத்துவிட்டோம். இதனால் பொறுப்பு எதுவும் இல்லை.
நடிகர் அமிதாப் பச்சன் தொடங்கி, ஆனந்த் மகேந்திரா வரை பலரும் என் பயணத்துக்கு நிதி உதவிசெய்திருக்கின்றனர். எனக்கு வாழ்வில் ஒருமுறையேனும் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று ஆசை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT