Published : 18 Oct 2021 08:21 AM
Last Updated : 18 Oct 2021 08:21 AM
சாதிரீதியாக பேசியதாக ஹரியாணா போலீஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டர் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்’’ என கூறியிருந்தார்
ஹரியாணாவில் தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே மன்னிப்பு கோரியிருந்ததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்தவர் கூறுகையில், யுவராஜ் சிங் ஹிசாரில் போலீசில் நேற்று சரணடைந்தார். அவரிடம் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஹிசாரில் உள்ள எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் சில நாட்களில் காவல்துறை தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும், அவர் ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வேண்டும்.யுவராஜ் சிங் எஸ்சி,எஸ்டி நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற வேண்டும். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், நாங்கள் அதை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளோம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT