Published : 17 Oct 2021 01:36 PM
Last Updated : 17 Oct 2021 01:36 PM
கேரளாவின் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத்தால் பெய்துவரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு பக்தர்கள் 17ம்தேதி (இன்று) 18ம்தேதி (நாளை) வருவதைத் தவிர்க்கவும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், சபரிமலைக்குச் செல்லும் பம்பா நதியில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளநீர் ஓடுவதால், பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை இரு நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றம் உருவாகியதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா,பாலக்காடு,மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம், இடுக்கி மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கோட்டயம் மாவட்டத்தில் கோட்டக்கல் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இடுக்க மாவட்டத்தில் கோக்கயாரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர்பலியானார்கள். கோட்டயம் மாவட்டத்தில் கோட்டக்கல் 4 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மலையாளத்தின் துலா மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி 16ம் ேததி (இன்று) சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். அதன்பின் பக்தர்கள் தரிசனதுக்காக 5 நாட்கள் அதாவது 21ம்தேதிவரை நடை திறந்திருக்கும். இந்த இடைப்பட்ட நாளில் அடுத்த மேல்சாந்தி(தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவார்.
ஆனால், பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதாலும், பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதாலும் சபரிமலைக்கு பக்தர்கள் இன்றும், நாளையும் வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்பின் 21-ம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பக்தர்கள் ஆன்-லைன் முன்பதிவு மூலமே, முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும்.
இந்த 5 நாட்களிலும் ஐயப்பனுக்கு நெய்அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், படிபூஜை, புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும். அக்டோபர் 21-ம் தேதி நடை சாத்தப்பட்டு நவம்பர் 2-ம்தேதி சித்திரா விஷேசத்துக்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் 3-ம்தேதி கோயில் நடை சாத்தப்பட்டு, நவம்பர் 15ம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனுக்காகத் திறக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT