Published : 17 Oct 2021 09:33 AM
Last Updated : 17 Oct 2021 09:33 AM

தங்கள் உரிமைக்காக காங். போராட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: உட்கட்சி பூசலை அல்ல: ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி


மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி போராட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி தங்களுக்குள் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், மூத்த தலைவர்களான ஏ.ஏகே.அந்தோனி, மல்லிகார்ஜூன கார்கே,கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

யார் பதவியில் இருக்கிறார், என்ன பதவியில் இருக்கிறார் என்பது பிரச்சினையில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த கட்சியாக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் உரிமைக்காக, அரசியலமைப்புச் சட்டத்துக்காக, விளிம்புநிலை மக்களுக்காக, ஏழை மக்களுக்காக காங்கிரஸ் போராட வேண்டும், தங்களுக்குள் உட்கட்சி பூசலில் ஈடபடக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள்.

சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் சரண் சித் சன்னி பேசியதை இங்கு நான் கூறுகிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைப்பேசியில் அழைத்து சரண் சித்திடம் நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறியதும் அவர் கண்ணீர்வி்ட்டு அழுதார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, சமானியரான தன்னை முதல்வர் பதவியில் அமரவைத்தது என்பது கனவிலும் நடக்காத செயல். அதை செய்துவிட்டீர்கள் என அழுதார். ஆனால், காங்கிரஸ் கட்சியும், தலைவரும் ஒருபோதும் யாரையும் பாகுபாடுபார்த்து நடத்தியதில்லை.

அநீதி, சமமின்மை, பாகுபாடு, சமூகத்தில் சாதி, மத, இனம், பின்புலத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக நாம்போராட வேண்டும். இதுதான் காங்கிரஸ் செய்ய வேண்டும், இதைத்தான் மக்கள் காங்கிரஸிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை பலவீனமடையச் செய்ய நினைப்போர் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் ஏழைகள், நடுத்தர மக்கள் மீதும் தொடர்்ந்து மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிற்க வேண்டும், மக்களின் உரிமைக்காகவும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் நிற்க வேண்டும்.

பட்டியலின பிரிவுகளுக்கு அவர்களின் தலைவிதியையும் மற்றும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள். பாஜக மனப்பான்மை என்னவென்றால், யாராவது ஏழையாகவோ அல்லது பட்டியலினம் அல்லது ஓபிசி அல்லது நடுத்தர வர்க்கமாக இருந்தாலோ அவர்கள் ஒரு உயரடுக்கு குழுவால் ஆளப்பட வேண்டும். ஏழைகளோ, நடுத்தரமக்களோ, பட்டியலினத்து மக்களோ தங்களின் விதியின் எஜமானர்களாக இருக்க முடியாது என்று நினைப்பார்கள்.

சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படும்போது, தலித், பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருந்து, தங்களின் வேலையைமட்டும் பார்த்தல் என்பது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்க விரும்பும் சமூகத்தில் உள்ள தீமை, வேறுபாடு மற்றும் பிளவை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x