Published : 17 Oct 2021 07:51 AM
Last Updated : 17 Oct 2021 07:51 AM
பொருளாதாரத்தை பேரழிவு தரும் வகையில் மத்திய அரசு தவறாகக் கையாள்கிறது என்றும், ஜனநாயகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் முக்கியத்துவத்தையும் குறைத்துவிட்டது என்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், மூத்த தலைவர்களான ஏ.ஏகே.அந்தோனி, மல்லிகார்ஜூன கார்கே,கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நாட்டின் அரசியல் சூழல், பணவீக்கம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
நாட்டின் அரசியல் சூழல் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல் மோடி அரசின் வேதனையான மற்றும் வெட்கமில்லாததை வெளிக்காட்டுகிறது. இந்தியா இனிமேலும் ஜனநாயக நாடு என்று கருதப்படாது, தேர்தல் ஜனநாயகத்துக்கு பெயர் பெற்று விளங்கி வந்தது.
நாடாளுமன்றம் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது, நீதித்துறைகளிலும், தீர்ப்பாயங்களிலும் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பாமல் பலவீனமாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நிலை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் மத்திய அரசு தொடர்ந்து அகங்காரத்துடன் செயல்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜெய் மிஸ்ராவை இதுவரை பிரதமர் மோடி பதவிநீக்கம் செய்யவில்லை.
நமக்கு உணவை வழங்கும் விவசாயிகள், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் மீது கடந்த 7 ஆண்டுகளாக கொடூரமான வடிவமைப்பு கொண்ட தாக்குதல்களைக் காண முடிந்தது.
உள்துறை இணை அமைச்சர் அஜெய் மிஸ்ரா ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார், அந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் 43 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது. மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வெளிப்படையாகவே விவசாயிகளை மிஸ்ரா அச்சுறுத்தினார். இருப்பினும் அவர் பதவீநீக்கம் செய்யப்படவில்லை.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாசயிகள் கடந்த ஓர் ஆண்டாகப் போராடி வருகிறார்கள். அகங்காரத்துடன் செயல்படும்அரசு விவசாயிகளுடன் பேச்சு நடத்த மறுத்து பார்வையாளராக மட்டுமே நிற்கிறது. அதே நேரத்தில் பாஜக மற்றும் காவல்துறையின் முரட்டு குழுக்கள் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன.
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொலை ஆகியவை குறித்து இதுவரை பிரதமர் எந்தவிதமான இரங்கலும், கண்டனமும் தெரிவிக்க மறுத்துவிட்டார். மத்திய உள்துறை இணை அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய மறுத்து தேசத்தின் மனசாட்சிையயைும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு அதிகமான அதிகாரம் வழங்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனும், மற்ற அரசியல் கட்சிகளுடனும் மத்திய அ ரசு ஆலோசித்திருக்க வேண்டும். கூடுதல்அதிகாரம் வழங்கி பிறப்பித்த அந்த உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும்.
சீனாவின் ஆக்ரோஷமான போக்கு, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலால், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு படிப்படியாக அழிந்து வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவது மிகப்பெரிய கவலை தரக்கூடியதாக இருக்கிறது. 2020-21ம் ஆண்டு பொருளாதாரம் சரிந்தபின், விரைவான பொருளாதார மீட்சி இருக்கும் என மோடி அரசு மார்தட்டியது. ஆனால், பொருளாதாரத்தின் அனைத்துக் துறைகளும் சமமற்ற முறையில் மீட்சிக்காக போராடும் சூழலைத்தான் காண முடிகிறது.
பொருளாதார வளர்ச்சிக் குறைவு, கரோனா தொற்றால் ஏற்பட்ட வேலையிழப்பும் இன்னும் சரியாகவில்லை. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையிழப்பு ஆகிய இரு பெரிய பிரச்சினைகளை லட்சக்கணக்கான குடும்பங்கள் சந்தித்து வருகின்றன.
பேரழிவு தரக்கூடிய வகையில் மோடி அரசு பொருளதாரத்தை கையாண்டுள்ளதன் விளைவு தெரிகிறது. பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையும், சராசரி இந்தியரின் குறைந்தபட்ச வருமானம் மற்றும் சேமிப்பும் முழுங்கப்பட்டுள்ளது. 14 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளளன, ஊதியக்குறைப்பு ஏற்பட்டுள்ளது, லட்சக்கணக்கான சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுள்ளன, சிறுவணிகர்கள் கடை நடத்த தடுமாறுகிறார்கள்
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT