Published : 16 Oct 2021 01:05 PM
Last Updated : 16 Oct 2021 01:05 PM

சாவர்க்கரின் தேசபக்தியை யாரும் கேள்வி எழுப்ப முடியாது: அமித் ஷா காட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப்படம்

போர்ட் ப்ளேர் 

வீர சாவர்க்கரின் தேச பக்தியையும், வீரத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரைச் சந்தேகப்படுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த 1911-ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்க்கர் சிறைக்குச் சென்று 6 மாதங்களுக்குப் பின் முதல் மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின்படி அடுத்த கருணை மனுவை எழுதினார் என்று வரலாறு கூறுகிறது” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று போர்ட் ப்ளேயர் சென்றிருந்தார். அப்போது 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எவ்வாறு சந்தேகப்பட முடியும். தேசத்துக்காக 2 ஆயுள் தண்டனைகளை சாவர்க்கர் அனுபவித்தார். சிறையில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார். அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்.

நல்ல, சுகமான வாழ்க்கையை வாழ சாவர்க்கருக்கு அனைத்து வசதிகளும் இருந்தன. இருப்பினும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, தேசத்துக்காகவும், தாய் மண்ணுக்காகவும் தியாகம் செய்தார். செல்லுலார் சிறையைப் போன்று சிறந்த புனிதஸ்தலம் இருக்க முடியாது. இந்தச் சிறையில் 10 ஆண்டுகள் கொடுமையை சாவர்க்கர் அனுபவித்தார். ஆனாலும், சாவர்க்கர் தனது துணிச்சலை, வீரத்தை விடவில்லை.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் சுதந்திரத்துக்குப் பின் பிறந்தவர்கள். ஆதலால், தேசத்துக்காக உயிரிழக்க வாய்ப்பு இருந்திருக்காது. இந்த தேசத்துக்காக வாழுங்கள் என்று இளைஞர்களிடம் கேட்கிறேன். குறைந்தபட்சம் மக்கள் இந்தச் சிறைக்கு வந்திருந்து இங்குள்ள நினைவிடங்களைக் கண்டு அஞ்சலி செலுத்த வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் மேற்கு வங்கம் சிறப்புப் பங்களிப்பு செய்தது. இந்த செல்லுலார் சிறைக்கு வந்தவர்களில் பெரும்பாலும் மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x