Published : 16 Oct 2021 12:42 PM
Last Updated : 16 Oct 2021 12:42 PM
இந்துத்துவாவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களால்தான் இப்போது இந்துத்துவாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் போல் அதிகார போதை ஏறிவிட்டது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மீது கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.
விஜயதசமி பண்டிகையையொட்டி சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
''இந்துத்துவா சித்தாந்தத்துக்கு அச்சுறுத்தல் என்பது வெளியே இருப்பவர்கள் மூலம் வரவில்லை. ஆனால், இந்துக்கள் என்று கூறுவோர், இந்துத்துவாவை ஏணியாகப் பயன்படுத்தி, அந்த சித்தாந்தத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களால்தான் தற்போது அச்சுறுத்தல் இருக்கிறது. அந்த நபர்கள் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரிவினை மற்றும் ஆட்சியை அடிப்படையாக வைத்துள்ளார்கள்.
இதுபோன்று வடிவமெடுத்து வருவோரிடம் இருந்து இந்துத்துவாவைக் காக்க வேண்டும். மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றுபட வேண்டும். பாஜகவுடன் உறவை முறித்தபின் மகாராஷ்டிராவையும், சிவசேனாவைும் பாஜக குறிவைக்கிறது
மும்பையை போலீஸ் மாஃபியாக்கள் ஆள்கிறார்கள் என்று அவமானப்படுத்துகிறார்கள். நீங்கள் இதுபோன்று உ.பி. மாநிலத்தைக் கூறுவீர்களா. நமது முதாதையர்கள் அனைவரும் ஒன்றுதான் என ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியுள்ளார். அப்படியென்றால் எதிர்க்கட்சியினரின் முன்னோர்கள், விவசாயிகளின் முன்னோர்கள வேறு கிரகத்திலிருந்து வந்தார்களா. அதிகாரத்துக்காகப் போராடுவது நல்லதல்ல, அதிகாரத்துக்கு அடிமையாவது, போதைக்கு அடிமையாவது போன்றதாகும்.
போதை மருந்துக்கு அடிமையானவர்கள், தங்களை அழித்து, குடும்பத்தையும் அழிப்பார்கள். அதிகாரத்துக்கான போதையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்.
சிவேசனா, ஆர்எஸ்எஸ் கொள்கையில் வேறுபாடு இல்லை. ஆனால், செல்லும் பாதைதான் வேறுபட்டது. ஆனால், தற்போது பாஜகவை விட்டுப் பிரிந்தபின் எங்களை பாஜக குறிவைக்கிறது. அமலாக்கப் பிரிவைப் பயன்படுத்தாதீர்கள். அடுத்த மாதத்தோடு 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறோம். எத்தனை முறை ஆட்சியைக் கவிழ்க்க முயன்றீர்கள். இனிமேல் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள் என சவால் விடுக்கிறேன்.
பாஜகவினருக்கும், அதன் முன்னோர்களும் சுதந்திரப் போராட்டத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. சாவர்க்கரையும், காந்தியையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. சுதந்திரப் போராட்டத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாதபோது, காந்தி, சாவர்க்கரைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?''
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT