Published : 14 Oct 2021 05:16 PM
Last Updated : 14 Oct 2021 05:16 PM
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதப் பிறப்பையொட்டி வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது என்று தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள தேவஸம் போர்டு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''மலையாள காலண்டர் அடிப்படையில் வரும் 16-ம் தேதி துலா மாதம் பிறக்கிறது. இதையொட்டி வரும் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். அதன்பின் அடுத்த மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவார்.
மாதப் பிறப்புக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டவுடன் அதற்குரிய பூஜைகள், விளக்கேற்றுதல் போன்ற ஆகமங்களைத் தற்போதுள்ள மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ், போட்டி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கண்காணிப்பில் செய்வார்.
இதைத் தொடர்ந்து உபதேவதைகள் கோயில்களும் திறக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டுப் பூஜைகள் நடைபெறும். 18 படிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜைகள் நடக்கும். ஆனால், கோயில் திறக்கப்பட்ட 16-ம் தேதி மாலை எந்தப் பூஜையும் கோயிலில் நடக்காது.
வரும் 17-ம் தேதி உஷா பூஜை முடிந்தபின், சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாலிக்காபுரம் கோயில் மேல்சாந்தி ஆகியோர் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும். இதன்படி, பந்தளம் அரண்மனையில் குலுக்குச் சீட்டுப் போடப்படும். இதில் மேல்சாந்தியாக அடுத்து வருவோர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.
10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அந்தச் சீட்டைத் தேர்வு செய்து நிர்வாகத்திடம் வழங்குவர். அதில் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரில் உள்ளவர்களே மேல்சாந்தியாக அடுத்த ஓராண்டுக்கு அறிவிக்கப்படுவர்.
வரும 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமே, முறையான கரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டுவர வேண்டும்.
இந்த 5 நாட்களிலும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், படி பூஜை, புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும். அக்டோபர் 21-ம் தேதி நடை சாத்தப்பட்டு நவம்பர் 2-ம்தேதி சித்திரா விஷேசத்துக்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் 3-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டு, நவம்பர் 1-5ம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனுக்காகத் திறக்கப்படும்''.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT