Last Updated : 14 Oct, 2021 04:48 PM

3  

Published : 14 Oct 2021 04:48 PM
Last Updated : 14 Oct 2021 04:48 PM

அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்: நிர்வாகத்தைக் கையில் எடுத்தது

கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் செயலாக்கம், நிர்வாகம், பராமரிப்பு, மேம்பாடு ஆகிய பணிகளை அதானி குழுமம் முறைப்படி கையில் எடுத்து கவனிக்கத் தொடங்கியுள்ளளது.

இந்தியா முழுவதும் 6 முக்கிய நகரங்களான லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை எடுத்தது.

இதன்படி, பொதுத்துறை, தனியார் கூட்டு அடிப்படையில் திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்புக் குத்தகையை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்பை அதானி குழுமத்துக்கு வழங்கியதற்கு கேரள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றது. கேரள அரசு நிறுவனமான கேரளா மாநிலத் தொழிற்துறை வளர்ச்சிக் கழகம் அந்த விமான நிலையத்தைக் குத்தகைக்கு எடுக்க முயன்றது.

ஆனால், அதானி குழுமம் குறிப்பிட்ட கேட்ட ஏலத் தொகைக்குக் குறைவாக இருந்தது எனக் கூறி மாநில அரசு நிறுவனத்துக்குக் குத்தகை நிராகரிக்கப்பட்டு அதானி குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக மத்திய அரசு மீது கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) குற்றம் சாட்டியது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்குக் குத்தகைக்கு வழங்கிடக் கூடாது எனக் கூறி சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை முறைப்படி அதானி குழுமம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உங்களுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறோம்.

கடவுளின் சொந்த தேசத்துக்கு வரும் பயணிகளை வரவேற்கிறோம். வாழ்க்கையை இணைக்கும் மகிழ்ச்சியான பயண அனுபவங்களுடன் வரும் உங்களுக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் நல்ல விஷயங்களுக்கான நுழைவாயிலாக இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறோம். பசுமையான இடங்கள், அழகான கடற்கரை, உயர்தர உணவகம் ஆகியவை கொண்ட கடவுளின் சொந்த தேசத்துக்கு வரும் பயணிகளை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த ட்வீட்டை மலையாளம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பதிவிட்டுள்ளது அதானி குழுமம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x