Published : 13 Oct 2021 01:40 PM
Last Updated : 13 Oct 2021 01:40 PM
உத்தரப்பிரதேசம் மஹோபாவின் ஒரு பழங்காலக் கோயிலில் முஸ்லிம் இளைஞர் பூஜை செய்து வருகிறார். இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துக்களுக்கு அக்கிராமத்தின் பஞ்சாயத்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உபியின் வறட்சிப் பகுதியாகக் கருதப்படுவது புந்தேல்கண்ட் பகுதி. இதன் ஒரு மாவட்டமான மஹோபாவிலுள்ளது பஸோத் எனும் கிராமம். இங்கு பழங்கால தேவி கோயில் உள்ளது.
இதில், அக்கிராமத்தை சேர்ந்த அனீஸ் அகமது (24) எனும் இளைஞர் கடந்த பத்துவருடங்களாக அன்றாடம் வந்து பூஜை செய்கிறார். இது சமீப காலமாக கிராமத்தின் ஒரு பகுதி இந்துக்களுக்கு பிடிக்கவில்லை.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அனீஸ் தான் பூஜை செய்வதை நிறுத்தவில்லை. வேறுவழியின்றி பஸோத் கிராமவாசிகள் அப்பகுதியின் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
நேரில் வந்து விசாரணை செய்த போலீஸாருக்கு பூஜை செய்யும் அனீஸின் நடவடிக்கைகளில் தவறு இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, பசோத் கிராமப் பஞ்சாயத்திடம் புகார் செய்து இப்பிரச்சனை தீர்த்துக்கொள்ளும்படி கூறி விட்டனர்.
இப்பிரச்சனையை அனிஸின் குடும்பத்தாரை அழைத்து பஞ்சாயத்து தலைவர் கியான் சிங் குஷ்வாஹா விசாரித்தார். அவர்களிடம் பூசையில் பின்னணியில் கூறப்பட்ட தகவல் நியாயமாக இருந்துள்ளது.
அதில், சுமார் பத்து வருடங்களுக்கு முன் சிறுவனாக அணீஸ் அக்கோயிலின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என மயக்கம் அடைந்துள்ளார்.
இதை கேள்விப்பட்டு அங்கு வந்த அவரது பெற்றோர்கள் அணீஸை அக்கோயிலுள்ள தேவி சிலையின் முன் படுக்க வைத்து வேண்டியுள்ளனர். இதில், அவர் உடம்நலம் தேறியுள்ளார்.
இதன் காரணமாக அப்போது முதல் அணீஸ் அன்றாடம் அக்கோயிலுக்கு வந்து தேவி சிலைக்கு பூஜை செய்கிறார். இதை அறிந்து அக்கிராமவாசிகளில் பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனினும், சமீப காலமாக சிலரிடம் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இப்பிரச்சனையில் தீர்ப்பளித்த பஞ்சாயத்து தலைவர் குஷ்வாஹா, அனீஸ் பூசை செய்வதில் தவறு இல்லை எனக் கூறி விட்டார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பஸோத் பஞ்சாயத்து தலைவர் கியான்சிங் கூறும்போது, ‘‘தம் கோயிலுக்கு வருவதுடன்பூஜையும் செய்யும் ஒரு முஸ்லிமை கண்டு இந்துக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இதற்கு முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பினாலும் ஏற்பதற்கு உரியது. எனவே, மதநல்லிணக்கத்தை பேணும் அனீஸின் நடவடிக்கைக்கு நான் தடை விதிக்க மறுத்து விட்டேன்.’’ எனத் தெரிவித்தார்.
இந்த பஞ்சாயத்து உத்தரவிற்கு பின் அனீஸ் அன்றாடம் கோயிலுக்கு வந்து பூஜை செய்து திரும்புவதை காண கிராமவாசிகள் கூடுவதும் வழக்கமாகி விட்டது. இதில், தேவைப்பட்டால் அனீஸுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் தயங்க மாட்டோம் என பஸோத் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT