Published : 13 Oct 2021 11:50 AM
Last Updated : 13 Oct 2021 11:50 AM

டெல்லி காவல் ஆணையராக அஸ்தானா நியமனம்; பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்: உயர் நீதிமன்றம் கருத்து

டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா | கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டலை மீறியது ஆகாது. அது மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவல் ஆணையர்களை நியமிக்கும்போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையின் டிஜிபியாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை டெல்லி காவல் ஆணையராக ஓராண்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நியமித்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் வாதங்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:

''பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்பது மாநிலத்தில் டிஜிபியை நியமிப்பதற்குத்தான். அந்த வழிகாட்டல்கள் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது.

மாநில போலீஸாரில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த 3 அதிகாரிகளில் ஒருவரைப் பரிந்துரை செய்து அதில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 2 ஆண்டுகள் வரை பதவிக் காலம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வழிகாட்டல்களில் யூனியன் பிரேதேசங்களுக்கு என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டவில்லை. யூனியன் பிரதேசங்களில் காவல் ஆணையர்களை நியமிப்பது குறித்து அந்த வழிகாட்டலில் இல்லை.

உச்ச நீதமன்றத்தின் உத்தரவு மாநிலத்தில் டிஜிபியை நியமிக்கும்போது மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய விதிகளாகும். ஆனால், டெல்லி போன்ற யூனியன் பிரதேசம் தனித்துவமானது. இங்கு போதுமான அளவு தகுதியான அதிகாரிகள் இருப்பதில் சிக்கல் இருக்கும். ஆதலால், டெல்லி போன்ற இடத்துக்கு பிரகாஷ் சிங் வழக்கு வழிகாட்டல் பொருந்தாது.

கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு டெல்லி காவல் ஆணையர்களை நியமிக்க என்னவிதமான விதிமுறைகளைப் பின்பற்றியதோ அதைத்தான் அஸ்தானா நியமனத்திலும் நடந்துள்ளது. அப்போதெல்லாம் யுபிஎஸ்சி அல்லது வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே. ஆதலால் டெல்லி காவல் ஆணையரை நியமிக்க நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட எந்தக் காரணமும் இல்லை. அது தேசியத் தலைநகரில் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆதலால், அஸ்தானா நியமனத்தில் பிரகாஷ் வழக்கில் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி பொருந்தாது. ஆதலால் ராகேஷ் அஸ்தானா நியமனத்தில் எந்த விதிமுறை மீறலும் நடக்கவில்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்''.

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x