Published : 13 Oct 2021 09:53 AM
Last Updated : 13 Oct 2021 09:53 AM

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை: 2023-ம் ஆண்டுவரை விலக்கு அளித்தது யுஜிசி

கோப்புப்படம்

புதுடெல்லி

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை. முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023-ம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுகிறது எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோர் கண்டிப்பாக பிஹெச்டி (டாக்டர்) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கல்வியில் தரத்தை உயர்த்த வேண்டும், கற்பித்தலில் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த விதிமுறையில் யுஜிசி திருத்தம் கொண்டுவந்தது. இது இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் 2021-22 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 4-ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில், “கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவதற்கு முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமில்லை. அந்த விதிமுறை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டால்தான், மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் பேராசிரியர் இடங்களை நிரப்ப முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, உதவிப் பேராசிரியர்களாகப் பணிக்கு வருவோர் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முனைவர் பட்டம் இல்லாமல் சேரலாம். முதுநிலைப் பட்டமும், யுஜிசியின் நெட் தேர்வு அல்லது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள்.

தற்போதைய நிலையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு வரமுடியும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினால், அதற்கு நீண்டகாலம் ஆகலாம். இதனால் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படும் நோக்கில் இந்தத் திருத்தத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு தள்ளிவைத்தது. இந்தத் திருத்தம் தள்ளிவைக்கப்பட்டதால், மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x