Published : 13 Oct 2021 08:15 AM
Last Updated : 13 Oct 2021 08:15 AM
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
டெல்லியில் வீர சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:
இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மா ஆகியவை சுதந்திரமானவை. இந்தக் கலாச்சாரத்தை நாம் தலைமுறைகளாக வளர்த்து வருகிறோம். வழிபாட்டை அடிப்படையாக வைத்து யாரும் இதைப் பிரித்துப் பார்க்கவில்லை. இந்துக்களின், முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஒன்றுதான். இந்த சிந்தனை மட்டும் சுதந்திரப்போராட்டத்தின்போது அனைவரின் மனதில் இருந்திருந்தால், அப்போதே இந்தியா பிளவுபடுவதைத் தடுத்திருக்கலாம்.
வீர சாவர்க்கர் ஒரு தேசியவாதி, தொலைநோக்குடையவர். சவார்க்கரின் இந்துத்துவா என்பது ஒருங்கிணைந்த இந்தியாதான், மதம், சாதி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் பாகுபாடுகாட்டக்கூடாது என்பதுதான் அவருடைய சித்தாந்தம். இதுதான் இந்த தேசத்தின் அடிப்படை.
சாவர்க்கர் ஒருமுறை கூறுகையில், இந்தியாவை ஆள வேண்டுமானால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினால்தான் முடியும் என்றுபுரிந்து கொண்டனர். அதனால்தான் அவர்கள் பிரிவினையை ஏற்படுத்த அதிகம் முயன்றனர். அந்தமான் சிறையிலிருந்து சவார்க்கர் வந்தபின் எழுதிய புத்தகத்தில், பல்வேறு விதமான மதவழிபாடுகள் இருந்தாலும் இந்து தேசியவாதம் ஒன்றுதான் என்று எழுதினார். தேசத்தைப் பிரித்தால்தான் கொள்ளையடிக்க முடியும், ஆள முடியும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.
இந்திய சமூகத்தில் பலரும் இந்துத்துவா, ஒற்றுமை குறித்துப் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சவார்க்கர் இதை சத்தமிட்டு பேசினார். இப்போது பல ஆண்டுகளுக்குப்பின், அதை உணர்ந்த நாம், நாட்டில் எந்தப் பிரிவினையும் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொருவரும் அவர் கூறிய சத்தமிட்டு கூறுகிறோம்.
சுதந்திரத்தின்போது தேசப்பிரிவினையில், இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் ஏராளமானோர் பாகிஸ்தான் சென்றனர். ஆனால், இன்றளவும் இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.இதை யாராலும் மாற்ற முடியாது.
நமக்கு ஒரே மூதாதையர்கள்தான், நம்முடைய வழிபாட்டு முறையாதான் வேறுபட்டுள்ளது. சனாதன தர்மத்தின் சுதந்திரமான கலாச்சாரத்தில் இருக்கிறோம் எனப் பெருமைப்பட வேண்டும், அதனால்தான் இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.
சாவர்க்கரின் இந்துத்துவா, விவேகானந்தர் இந்துத்துவா என்பதெல்லாம் இல்லை, அனைத்தும் ஒன்றுதான் . அனைவரும் ஒரே கலாச்சார தேசியவாதத்தைப் பற்றி பேசுகிறார்கள், அங்கு மக்கள் தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் வேறுபடுவதில்லை. ஏன் நாம் வேறுபட வேண்டும். ஒரே தேசத்தில்தானே பிறந்தோம். ஒன்றாகத்தானே போராடினோம். நாம் வழிபடும் கடவுளும், முறையும்தான் வேறுபட்டுள்ளது. பல்வேறு விதமான கடவுள் வழிபாடு என்பது நமது பாரம்பரியமாக வந்தது.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT