Published : 12 Oct 2021 05:03 PM
Last Updated : 12 Oct 2021 05:03 PM
பிரதமர் மோடியின் ஆலோசகராகத் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை முன்னாள் செயலாளரும், உயர் கல்வித்துறையில் செயலாளராக இருந்தவருமான அமித் காரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அமித் காரே பதவியில் இருப்பார்.
1985-ம் ஆண்டு பிஹார்-ஜார்க்கண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அமித் காரே, உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்து கடந்த மாதம் 20-ம் தேதிதான் ஓய்வு பெற்றார். அதன்பின் அவர் பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில், “1985-ம் ஆண்டு கேடர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் காரேவைப் பிரதமரின் ஆலோசகராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பதவியில் இருக்கும் அமித் காரே 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைப் பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி கண்காணித்து உருவாக்கியவரும் அமித் காரேதான். அதுமட்டுமல்லாமல் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையிலும், டிஜிட்டல் ஊடகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களையும், விதிகளையும் புகுத்தியவர் அமித் காரே என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக இதற்கு முன் அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா, முன்னாள் செயலாளர் அமர்ஜித் சின்ஹா ஆகியோர் இருந்து ஓய்வு பெற்றனர். முடிவுகள் எடுப்பதில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் அமித் காரே, பிரதமர் மோடியின் கீழ் பணியாற்றிய செயலாளர்களில் ஒருவர்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உயர் கல்வித்துறைச் செயலாளராக அமித் காரே நியமிக்கப்பட்டார். அதன்பின் புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பு தீவிரமடைந்து, 2020 ஜூலை மாதம் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT