Published : 12 Oct 2021 03:03 PM
Last Updated : 12 Oct 2021 03:03 PM

சில சம்பவங்களில் மட்டும் சிலர் மனித உரிமையை பார்க்கின்றனர்: பிரதமர் மோடி சாடல்

புதுடெல்லி

மனித உரிமை என்பதை பலர் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு முடிவு செய்கின்றனர், சிலர், சில சம்பவங்களில் மட்டும் மனித உரிமையை பார்க்கின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் கீழ் அதே ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டாலும் அதனைக் குற்றமாக எடுத்துக் கொள்ளும் இந்த ஆணையம், அது குறித்து விசாரணை நடத்துகிறது. மனித உரிமைகள் மீறப்பட்ட விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இதர நிவாரணம் மற்றும் தவறிழைத்த அரசு ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது நிறுவன தின நிகழ்ச்சி இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் அருண் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. ஒரு திட்டமானது, சிலருக்கு மட்டும் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டால், அது உரிமை மீறல் குறித்த பிரச்னையை எழுப்புகிறது. இதன் காரணமாகத்தான், அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

பல ஆண்டுகளாக முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என முஸ்லிம் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அதை இயற்றி புதிய உரிமைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மனித உரிமை என்பதை பலர் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு முடிவு செய்கின்றனர். சிலர், சில சம்பவங்களில் மட்டும் மனித உரிமையை பார்க்கின்றனர். மற்றவற்றில் பார்ப்பது இல்லை. அரசியல் நோக்கங்களுக்காக பார்க்கும்போது, மனித உரிமை மீறப்படுகிறது. இந்த பாரபட்சமான நடைமுறை ஜனநாயகத்திற்கு பெரும் தீங்காக அமைகிறது.

அவர்கள், பாரபட்ச நடைமுறையில் மனித உரிமை நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பெயரை கெடுக்க விரும்புகின்றனர். அரசியல் லாப நஷ்டங்களுக்காக பார்க்கும்போது, மனித உரிமையுடன் ஜனநாயகமும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x