Published : 12 Oct 2021 02:05 PM
Last Updated : 12 Oct 2021 02:05 PM
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் முறையிட முடிவு செய்துள்ளனர்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையேமோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட கடந்த 10-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதி நேரம் கேட்கப்பட்டது. குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கியது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் குடியரசுத் தலைவரிடம் கோரி்க்கை மனுவை வழங்க உள்ளனர்.
இந்த காங்கிரஸ் குழுவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் செல்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் செல்லும் இந்த குழுவினர் நாளை காலை 11.30 அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து பேசி, கோரிக்கை மனுவை வழங்குவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியஅமைச்சர் அஜெய் மிஸ்ராவை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும், ஆஷிஸ் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT