Published : 12 Oct 2021 09:47 AM
Last Updated : 12 Oct 2021 09:47 AM
பஞ்சாப், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது பிரச்சார வியூகங்கள் அமைக்கத் தனியார் நிறுவனத்தை அமர்த்தியுள்ளது காங்கிரஸ். டிசைன் பாக்ஸ் எனும் இந்நிறுவனம் ஏற்கெனவே அசாமில் அக்கட்சிக்காகப் பணியாற்றி உள்ளது.
தேர்தல் பிரச்சார நிபுணராகக் கருதப்படும் பிரசாந்த் கிஷோரை அடுத்து ’டிசைன் பாக்ஸ்’ எனும் நிறுவனமும் காங்கிரஸுக்குப் பணியாற்ற உள்ளது. இந்நிறுவனம் முதன்முறையாக காங்கிரஸுக்கு சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றியது.
இதில் கண்ட வெற்றியால் அக்கட்சி அடுத்துவந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் அமர்த்தியது. இதில் வெற்றி கிடைக்கவில்லை எனினும், அதன் பணிகள் கட்சிக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகக் கருதப்படுகிறது.
அடுத்த வருடம் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் தனது பிரச்சாரங்களுக்கு வியூகம் அமைக்கும் பொறுப்பை டிசைன் பாக்ஸ் நிறுவனத்திடம் காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘இந்நிறுவனம், தசராவிற்குப் பின் பஞ்சாப்பிலும், தீபாவளிக்குப் பிறகு உத்தராகண்டிலும் பொறுப்பேற்க உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியாகவும், உத்தராகண்டில் எதிர்க்கட்சியாகவும் நாம் இருப்பதால், அம்மாநிலங்களுக்கு இருவேறு வகையான வியூகங்களை அந்தத் தனியார் நிறுவனம் அமைக்கும்’’எனத் தெரிவித்தனர்.
இதற்கு முன் உ.பி. மற்றும் பஞ்சாபின் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்திடம் காங்கிரஸ் பொறுப்பை ஒப்படைத்திருந்தது. பிறகு சில மாதங்களில் உ.பி.யில் அவரது பணி ரத்து செய்யப்பட்டது.
பஞ்சாப்பில் வெற்றி பெற்றதால் அடுத்த தேர்தலிலும் பிரசாந்தை முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் அமர்த்தினார். இங்கு நிலவிய உட்கட்சிப் பூசலால் பிரசாந்த் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
எனவே, பஞ்சாப்புடன் சேர்த்து உத்தராகண்டிற்கும் காங்கிரஸ் புதிதாக ஒரு நிறுவனத்தை அமர்த்த வேண்டி வந்துள்ளது. உ.பி.யில் அப்போறுப்பை பிரியங்கா காந்தியும், கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் தலைவர்களும் நேரடியாக பிரச்சாரப் பொறுப்பை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...