Published : 11 Oct 2021 09:57 AM
Last Updated : 11 Oct 2021 09:57 AM

காஷ்மீரில் வேட்டையை தொடங்கியது பாதுகாப்புபடை: பொதுமக்களை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்

ஜம்மு- காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் எதிர்ப்பு முன்னணி தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு இரண்டு தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர்.

தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்தனர்.

இதுபோலவே அடுத்தடுத்த அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை காஷ்மீர் பண்டிட் மருந்தாளர் மகான் லால் பிந்த்ரூ, பள்ளி முதல்வர் சுபிந்தர் கவுர், பள்ளி ஆசிரியர் தீபக் சந்த் மற்றும் பீகாரைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான் ஆகியோர் சமீபத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் எதிர்ப்பு முன்ணணியை சேர்ந்த தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இம்தியாஸ் அகமது தார் எனத் தெரியவந்துள்ளது.

இம்தியாஸ் அகமது தார் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x