Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM
12 ஆழ்வார்கள் இயற்றிய 4,000பாசுரங்களே வைணவ பக்தி இலங்கியங்களாக இன்றளவும் கருதப்படுகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்பது, தமிழ் வேதம் என்றும் திராவிட வேதம் என்றும் இன்றளவும் போற்றப்படுகிறது.
5-ம் நூற்றாண்டு முதற்கொண்டு இயற்றப்பட்ட பாசுரங்களுக்கு, உலகின் மிகப்பெரிய வைணவத் திருத்தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், வைணவத்தை கட்டிக் காத்த 12 ஆழ்வார்களை தமிழர்கள் என்கிற காரணத்தால் இருட்டடிப்பு செய்கிறதோ எனும் எதிர்மறை எண்ணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தோற்றுவிக்கிறது.
ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களை நவீன தொழில்நுட்பத்தில் பதிவு செய்யாமலும், அதற்குமுன்னுரிமை கொடுக்காமலும், 14, 15-ம் நூற்றாண்டில் வந்தஅன்னமய்யா மற்றும் புரந்ததாசரின் கீர்த்தனைகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் தற்போது முன்னுரிமை அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இவர்கள் இயற்றிய பாடல்கள், கீர்த்தனைகளை தனது தொலைக்காட்சி சேனல் மூலம் விளம்பரப்படுத்தி வரும் தேவஸ்தானம், கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகளாக வைணவத்தையும், பெருமாளையும் போற்றி வரும் தமிழ் பாசுரங்களை பின்னுக்கு தள்ளுவது ஏன் எனும் கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
கி.பி. 5-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. இந்த கால கட்டத்தில்தான் ஆழ்வார்கள், திருமாலின் அழகில் மெய்மறந்து 4,000 பாசுரங்கள் பாடினர்.
அதன் பின்னர் நாதமுனிகள் என்பவர் திவ்ய பிரபந்தம் எனும்பெயரில் நூலாக இவற்றை தொகுத்தார். 6-ம் நூற்றாண்டில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வாரும், 7-ம் நூற்றாண்டில் திருப்பாணாழ்வார், திருமழிசையாழ் வார், தொண்டரடிப் பொடியாழ்வாரும், 8-ம் நூற்றாண்டில், பெரியாழ்வார், கோதைஆண்டாள் மற்றும் திருமங்கையாழ்வாரும், 9-ம் நூற்றாண்டில் குலசேகராழ்வார், நம்மாழ்வார் மற்றும் மதுரகவியாழ்வாரும் என மொத்தம் 12 ஆழ்வார்கள் வைணவத்தை கட்டிக்காத்தும், திருமாலின் அழகில் மனமுருகியும் பாடிய பாடல்களே 4,000 திவ்ய பிரபந்தகளாகும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றளவும் வைணவ கோமான் ராமானுஜரால் வரையறுக்கப்பட்ட பூஜை வழிமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. வைகானச ஆகம விதிகள் என்பது இதன் பெயராகும். ஆச்சாரியார்ஆளவந்தாருக்கு பின்னர் அவரது பீடத்தில் ஏறிய ராமானுஜர், அனைவரும் புரிந்து கேட்டு மகிழும்வகையில் திருவாய்மொழிக்கு,பொருளை எடுத்துக் கூறினார். இவரது சீடரான அனந்தாழ்வாரை கர்ப்பிணி மனைவியுடன் திரு மலைக்கு அனுப்பி அங்கு பூந் தோட்டம் அமைத்து, சுவாமிக்கு மலர் தொண்டு செய்யும்படி பணித்தார் ராமானுஜர். திருப் பதிக்கு தனது சீடர்களுடன் வந்த ராமானுஜர், திருமலையே திருமாலின் உருவமென கருதி, அதில் கால்பட்டு விட கூடாது என்பதால், தனது முழங்காலால் திருமலைக்கு சென்று சுவாமியை வழிபட்டார். இடையே ராமானுஜர் ஓய்வெடுத்த இடத்தில் இப்போது கூட பாஷ்யகாரர் சந்நிதி உள்ளது.
பின்னர் கீழ் திருப்பதிக்கு வந்த ராமானுஜர், திருப்பதியில் வைணவத்தைப் பரப்பினார். அப்போதுதான் திருப்பதி நகரில் இவரின் முயற்சியால்தான் மன் னர்களின் ஒத்துழைப்புடன் கோவிந்தராஜர் கோயில் கட் டப்பட்டுள்ளது. இங்குதான் ராமானுஜருக்கு விட்டல் தேவன் சீடரானார்.
இந்த காலகட்டத்தில்தான் சைவர்களும், வைணவர்களும் திருப்பதி கோயில் குறித்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது, ராமானுஜர்தான் முன்னின்று இப்பிரச்சினையை தீர்த்து வைத்ததாகவும் வைணவ வரலாறு தெரிவிக்கிறது.
குலசேகரப்படி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மூலவரின் கர்ப்பகிரக சந்நிதிக்கு முன் ‘குலசேகரப்படி’ இருக்கும். இவர் 105 பாசுரங்களை பாடி, பெருமாள் திருமொழி எனும் பிரபந்தத்தை இயற்றினார். திருப்பதிக்கு வந்த குலசேகர ஆழ்வார், எனக்கு எந்த பிறவியும் வேண்டாமென்றும், ஏழுமலையானின் திருப்படியாக இருந்தால் போதுமென்றும் வரம்பெற்றார். ஆதலால், இன்றும், திருமாலின் முன் இருப்பது குலசேகரப்படி என்றழைக்கப்படுகிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர சாம்ராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள், நவாபுகள், ஜமீன்கள், ஹத்திராம் மடாதிபதிகள் போன்றோர் ஏழுமலையான் கோயிலை நிர்வகித்தனர். இறுதியில் மதராஸ் மாகாணத்திலும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட இக்கோயில், 1933-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆந்திர மாநில பிரிவினையின்போது, ஆந்திராவுக்கு ஏழுமலையான் கோயில் வழங்கப்பட்டது. தமிழ் மன்னர்கள், சக்கரவர்த்திகள், ஆழ்வார்கள் உட்பட பல வைணவர்கள் கட்டிக்காத்த இக்கோயிலில் இன்றுவரை தமிழ் மரபுப்படியே பூஜைகள், ஆராதனைகள், விழாக்கள் நடந்து வருகின்றன. ஆனால், கோயிலை உருவாக்கி, கட்டிக்காத்து, ஆகம விதிகளை உருவாக்கி, அதன்படிநடந்துகொள்ள அறிவுறுத்தியஆழ்வார்கள் மறக்கடிக்கப்படுகின்றனர் என்பதே பக்தர்களின் வாதமாக உள்ளது.
ஆழ்வார்களின் பாசுரங்கள் இசை வடிவாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு போய்ச் சேர வேண்டும். அதன் புனிதம் காக்கப்பட வேண்டும். இறையன்பு வெளி உலகத்துக்குப் பரவலாகத் தெரியவேண்டும் என்பதே தமிழ் பக்தர்களின் மன வலியாகும்.
அன்னமாச்சார்யாவையும், புரந்தரதாசரையும் இதற்காக குறைத்து மதிப்பிட வில்லை. இவர்களுக்கு கொடுத்து வரும் மரியாதையை, இவர்களுக்கு முன் தோன்றி, வைணவத்தை செழித்தோங்கச் செய்த பன்னிரு ஆழ்வார்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக முன் வைக்கப்படுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
இதேபோன்று, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்க வேண்டும். இதன்பொருள் அறியப்பட வேண்டும். இதில் தெலுங்கு, கன்னட கல்வெட்டுகள் கூட 20 சதவீதம் வரை உள்ளது. இவற்றையும் பாதுகாத்து, இளம்தலைமுறைகள் இவை குறித்து தெரிந்து கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென்பதே கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT