Last Updated : 09 Oct, 2021 05:01 PM

4  

Published : 09 Oct 2021 05:01 PM
Last Updated : 09 Oct 2021 05:01 PM

அக். 16-ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கட்டம்: தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுமா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி 

காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கும் காரியக் கமிட்டிக் கட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது. தற்போதைய அரசியல் சூழல், அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தல், தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்பர். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று ஜி-23 தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வாரியத் தேர்தல் உறுப்பினர்கள் குறித்த தேர்தலையும் ஜி-23 தலைவர்கள் நடத்த காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆதலால், இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

காரியக் கமிட்டிக் கூட்டத்தை விரைவாகக் கூட்டக் கோரியும் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியிருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்கு நிரந்திரமான தலைவர் வேண்டாம். யார் கட்சியில் முடிவுகளை எடுக்கிறார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

கபில் சிபல் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். ஆனால், தற்போது ஜி-23 தலைவர்களுக்கும், ராகுல் காந்திக்கும் இடையேதான் கடும் போட்டி இருந்து வருவதாகக் கூறப்படுகிறது

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜெய் மகான் நிருபர்களிடம் கூறுகையில், “கபில் சிபலுக்கு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் அளித்த கட்சியை அவமானப்படுத்தக் கூடாது. அமைப்புரீதியான எந்தப் பின்புலமும் இல்லாத கபில் சிபலுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியவர் சோனியா காந்தி. இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.

கடந்த முறை நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கரோனா 2-வது அலையைக் காரணம் காட்டி, உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான தேதியும் குறிக்கப்படவில்லை. ஆதலால், வரும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும், எப்போது முடியும் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது தேர்தல் வெற்றியை பாதிக்கும். ஆதலால், உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்படும். ஆனால், அனைத்து உறுப்பினர்கள் கருத்துப்படி தேர்தல் நடத்தும் தேதி முடிவாகும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பாரா, அல்லது தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா எனத் தெரியவில்லை. ஆனால், இந்திய தேசிய மாணவர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், காங்கிரஸ் சமூக வலைதளம் ஆகியவை அடுத்த தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x