Published : 09 Oct 2021 04:37 PM
Last Updated : 09 Oct 2021 04:37 PM
பிஹாரின் இரண்டு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் லாலுவின் மகன்களுக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதாக மூத்த மகன் தேஜ் பிரதாப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிஹாரின் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) முக்கிய எதிர்கட்சியாக உள்ளது. இவரது இரண்டு மகன்களான முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வீ மற்றும் முன்னாள் மாநில அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவுகளுக்கு இடையில் மோதல் நிலவுகிறது.
சமீப காலமாக உருவான இந்த மோதல் தற்போது தீவிரமாகி உள்ளது. பிஹாரின் தாராபூர், குஷேஷ்வர்ஸ்தான் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 30 -இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக கூட்டணி சார்பில் அத்தொகுதிகள் தன் எம்எல்ஏக்களை கரோனாவால் இழந்த முதல்வர் நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியில் இவ்விரண்டிலும் லாலுவின் ஆர்ஜேடி போட்டியிடுகிறது.
இதற்கு அதன் கூட்டணி கட்சிகளுடனானப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எனவே, காங்கிரஸும் தனது வேட்பாளர்களை அங்கு போட்டியிட வைத்துள்ளது.
இந்நிலையில், ஆர்ஜேடியின் பிரச்சாரகர்கள் பட்டியலில் லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் மற்றும் மூத்த மகள் மிசா பாரதியின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
இதனால், கடும் கோபத்திற்கு உள்ளான தேஜ் பிரதாப், தாம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது தந்தை லாலுவின் பாணியில் பொதுமக்களுடன் கலந்து பேசும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார் தேஜ் பிரதாப்.
இதுபோல் அன்றி, இளைய மகனான தேஜஸ்வீ பொதுமக்களிடம் இருந்து விலகி தான் ஒரு முக்கிய அரசியல்வாதி எனும் வகையில் செயல்படுகிறார்.
இதனால், இருவரது நடவடிக்கைகளால் ஆர்ஜேடியில் மோதல் உருவாகி தொடர்கிறது. எனினும், தந்தை லாலு, தாய் ராப்ரி தேவி, எம்.பியும் சகோதரியுமான மிசா பாரதி உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலானவர்கள் தேஜஸ்வீக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதை முடிவிற்கு கொண்டுவர, தேஜ் பிரதாப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் லாலு இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT