Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
இந்தியாவில் இருந்து பல்வேறுகாரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயரும் மக்கள்அதிகம். அவர்களில் கேரளா, பஞ்சாப், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். அவர்களுக்காக முதல் மாநிலமாக கேரளா கடந்த 1996-ல்புலம்பெயர்ந்த கேரளவாசிகள் நலத்துறை அமைத்தது.
அதன்பின், பஞ்சாப் மாநிலமும் அவர்களுக்கான துறையை அமைத்தது. பிஹார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேறு சில துறை களில் புலம்பெயர்ந்த மாநில மக்களுக்காக தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டன.
தமிழகத்தில் 2011-ல் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான மறு வாழ்வு மற்றும் நல ஆணையம் தொடங்கப்பட்டது. வெளி மாநிலங் களில் வாழும் தமிழர்களும் அதில்சேர்க்கப்பட்டனர். எனினும் அதன்செயல் பாடுகள் முடங்கின. தற்போது திமுக அரசு மீண்டும்ஆட்சிக்கு வந்த பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நலப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்துறைக்கு தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பின் முக்கியநிர்வாகி ஜெர்மனி வாழ் தமிழர் பி.செல்வகுமார் கூறும்போது, ‘‘இங்கு நம் குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழைக் கற்றுத் தருவதற்கு, நம் பண்பாடுகளை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப் படுத்துவதற்கு தமிழகம் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் தொழில் தொடங்க விரும்பும் புலம் பெயர்ந்தவர் களுக்கு உதவுவதை தமிழக அரசின் புதிய அமைப்பு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
தென் கொரியாவில் வாழும் தமிழர் கல்வியாளர் சுரேஷ் மந்திரி யப்பன் கூறும்போது, ‘‘தமிழர்கள் குறைந்த எண் ணிக்கையில் உள்ள நாடுகளுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்க தனி பாடத் திட்டங்கள் தேவை’’ என்று தெரிவித்தார்.
அகில இந்திய தமிழ் பேரவை பொதுச் செயலாளர் டெல்லிவாசி இரா.முகுந்தன் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘தமிழர் நல வாரியத்துடன் இணைந்து உள்ளூரில் பணியாற்றும் வகையில் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவரை நோடல் அதிகாரியாக அமர்த் தினால் உதவி பெறுவது எளிதாக இருக்கும். புலம்பெயர்ந்தவர்களே தமிழகத்தின் கலாச்சாரத்தையும் அறிஞர்களின் புகழையும் பரப்பி வருகிறோம். இப்பணியில் தமிழர் நல வாரியம் புலம்பெயர்ந்த வர்களுக்கு உதவ வேண்டும்’’ என்றார்.
தமிழர் நல வாரிய ஆணையர் பேட்டி
‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் புலம்பெயர்ந்த தமிழர் நல ஆணையத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த மார்ச் 1, 2011-ல் இயற்றப்பட்ட சட்டம் இன்னும் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படிதான் தமிழர் நல வாரியம் அமைக்கப்படுகிறது. இந்த வாரியம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குமானது.
கடைசியாக 2015-ல் நடத்திய புள்ளிவிவரத்தின்படி சுமார் 28 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்வதாக பதிவாகி உள்ளது. ஆனால், பலஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. தற்போதுள்ள புள்ளிவிவரம் முழுமையானது அல்ல. தற்போது முதல்வர் அறிவிப்புக்கு பின்னர் முழு புள்ளிவிவரத்தை சேகரிக்கும்பணியில் ஈடுபட்டுள்ளோம்.
பல பிரச்சினைகளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், அவர்களது சங்கங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தீர்த்து வருகிறோம். எனினும் சிலவற்றில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டியுள்ளது. எனவே, கண்டிப்பாக தேவையான நேரங்களில் மத்திய அரசின் உதவியை நாடுவோம். இதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக கிளை இயக்குநர் முனைவர் வெங்கடாசலத்துக்கு அழைப்பு விடுத்து பேசி வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உணவு விடுதியில் பணியாற்றிய தமிழர் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்தால் முடிந்த வரை அவர்களுக்கு உதவி செய்வோம்.
இவ்வாறு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT